யாதவ மகாசபை தலைவர் பதவி! சமுதாய பலத்தை நம்பி புதிய ரூட்டில் காங்கிரஸ் புள்ளி! அடுத்தது என்ன?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் யாதவ மகாசபை தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டு காய்நகர்த்திய அவர், அந்த முயற்சி கைகூடாததால் இப்போது சமுதாய அரசியலை கையிலெடுத்துள்ளார்.
ஏற்கனவே யாதவ சமுதாய மக்கள் மத்தியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மிகுந்த செல்வாக்கோடு இருந்து வரும் நிலையில், நாசே ராமச்சந்திரன் எந்தளவு தனக்கான செல்வாக்கை பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் திருநாவுக்கரசர் தலைவராக இருந்தபோது பொருளாளராக இருந்தவர் நாசே ராமச்சந்திரன். கல்லூரி அதிபரான இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை குறி வைத்து அதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டார். டெல்லியில் முகாமிட்டு எவ்வளவோ லாபி செய்தும் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் யாதவ மகாசபை தலைவராக அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

யாதவ சமுதாயம்
மாநில தலைவர் பதவி கொடுக்காமல் காங்கிரஸ் கட்சி கைவிட்ட நிலையில், சமுதாய பலத்தை நம்பி சமுதாய அரசியலில் இப்போது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் நாசே ராமச்சந்திரன். யாதவ சமுதாய மக்கள் மத்தியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அபார செல்வாக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நாசே ராமச்சந்திரன் எந்தளவு யாதவ சமுதாய மக்களிடம் தனக்கான செல்வாக்கை பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரம்மாண்ட மாநாடு
இதனிடையே யாதவ மகாசபை தலைவராகியுள்ள நாசே ராமச்சந்திரன், சென்னையிலும், மதுரையிலும் யாதவ மகாசபை சார்பில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதேபோல் அகில இந்திய அளவில் உள்ள யாதவ சமுதாய தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து இந்தாண்டு இறுதிக்குள் பிரம்மாண்ட மாநாடு ஒன்றையும் நடத்தி தனது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார்.

முதல்வருடன் சந்திப்பு
இதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரம் கேட்டுள்ள நாசே ராமச்சந்திரன், அந்தச் சந்திப்பின் போது யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்கும் வகையில் கால்நடை நல வாரியம் ஒன்றை அமைக்கவும் கோரிக்கை வைக்கவுள்ளார். நாசே ராமச்சந்திரனின் புதிய பாதை அரசியலை கதர்ச்சட்டை முக்கிய புள்ளிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications