சர்வ அமாவாசை, எமகண்டம் ஓவர்! அழகிரி, திருநாவுக்கரசு புடை சூழ வேட்புமனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்
சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்பி திருநாவுக்கரசர் ஆகியோருடன் மனு தாக்கல் செய்தார்.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜ்ய சபா எம்பி தேர்தல்
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

ப.சிதம்பரம் போட்டி
திமுக தனக்கான 4 இடங்களில் 3 இடங்களுக்கு போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. திமுக வேட்பாளர்களான கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி தலைமை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான 10 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

வேட்புமனு தாக்கல்
இந்நிலையில் சர்வ அமாவாசையான இன்று 12 மணியுடன் எமகண்டம் நிறைவடைந்த நிலையில் தலைமை செயலகத்தில் சட்டசபை செயலாளரிடம் ப.சிதம்பரம் மாநிலங்களவை வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மூத்த தலைவர்கள்
மாநிலங்களவை வேட்பாளராக ஒருவரை முன்மொழிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் என்பதால், 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், ப.சிதம்பரத்தை வேட்பாளராக முன்மொழிந்து கையெழுத்திட்டனர். சேர்ந்தே இருப்பது காங்கிரஸும் கோஷ்டி பூசலும் என அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாக பேசப்படுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு கோஷ்டிகள் ஆக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக வந்து ப.சிதம்பரத்தை வேட்பாளராக முன்மொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications