தாமரையை தூக்கி சுமந்தவரையே பாஜக தலைமை இப்படி அசிங்கப்படுத்துதே.. தமிழிசைக்காக கை கொடுத்த “கை” கட்சி!
சென்னை: தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக தாமரையை தூக்கிச் சுமந்தவரையே பாஜக தலைமை மதிக்கும் விதம் இவ்வளவுதான் என்பது வெட்கக்கேடானது என காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி பொதுச் செயலாளர் சாடியுள்ளார்.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பொறுப்பேற்றார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, விழா மேடைக்கு வந்த தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்து கண்டிக்கும் தொனியில் பேசினார். தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுத்து கோபமாக பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன் அண்மைக்காலமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவருக்கு எதிராக பேசி வருவதுடன் அண்ணாமலை வைத்திருக்கும் வார் ரூம் ஆட்களுக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்தார்.
இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. தமிழிசைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரள, அண்ணாமலை தரப்பு இந்த விஷயத்தை டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. இதன் காரணமாகத்தான் தமிழிசையை பார்த்தையும் தன்னுடைய கோபத்தை நேரடியாகவே காட்டியிருக்கிறார் அமித் ஷா எனக் கூறப்படுகிறது.
பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டித்ததாக கூறப்படும் நிலையில், சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பூ.நல்லமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்களை அவமதிக்கும் பாஜகவை கண்டிக்கிறோம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா மேடையில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கண்டிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மருத்துவர், முன்னாள் ஆளுநர், பெண் என்றும் பாராமல் பொதுமேடையில் அமித்ஷா நடந்து கொண்ட விதம்தான் பாஜகவின் கலாச்சாரம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. தாமரை தமிழ்நாட்டில் மலர்ந்தே தீரும் என ஒவ்வொரு மேடையிலும் சூளுரைத்து, தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக தாமரையை தூக்கி சுமந்தவரையே பாஜக தலைமை மதிக்கும் விதம் இவ்வளவுதான் என்பது வெட்கக்கேடானது.
பொதுவெளியில் தமிழ் பெண்ணை மிரட்டும் உள்துறை அமைச்சர், மக்களையே சந்திக்காத நிர்மலா சீதாராமனை இப்படி நடத்துவாரா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணியத்துடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அமித் ஷா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழிசை சௌந்தரராஜனை, பொது நிகழ்ச்சி மேடையில் கண்டித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தக்க பதிலடி கொடுத்து தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும் எனவும் கேரளா காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications