தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலால் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் புதிய வேட்பாளர் பட்டியலை தயார் செய்து மீண்டும் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தொகுதிகளை பெற்றதில் பல்வேறு எம்பிக்களும் அதிருப்தி தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக வேட்பாளர்கள் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவை தொடர்ந்து தேமுதிக, மதிமுக, கொமதேக, மமக, ஐயூஎம்எல், மஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

அதேபோல் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறை அதிமுகவை நேரடியாக 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எதிர்த்து களமிறங்குகிறது.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலால் அதிருப்தி அடைந்ததாக தெரிய வந்துள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, புதிய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்ய ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோருக்கு இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திங்களன்று நடக்கும் தேர்தல் மையக்குழு கூட்டத்தில் புதிய வேட்பாளர்கள் பட்டியல் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதேபோல் தொகுதிகளை இறுதி செய்யப்பட்டது தொடர்பாகவும் காங்கிரஸ் எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். சிவகங்கை தொகுதியை பெறாததால் கார்த்தி சிதம்பரம் அதிருப்தி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் பட்டுக்கோட்டை தொகுதியை ஏன் கேட்டுப் பெறவில்லை என ராஜேந்திரன் என்பவர் வாக்குவாதம் செய்ததாகவும் சொல்கிறார்கள்.
இன்னொரு தரப்பில் குளச்சல் தொகுதியை மீனவர் சமூகத்திற்கு ஒதுக்கவில்லை என்றும் காங்கிரஸ் மீனவர் பிரிவு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாகவே மார்ச் 30ஆம் தேதிக்கு தேர்தல் மையக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய வேட்பாளர் பட்டியல் தயாரான பின், மீண்டும் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications