இனிமே இந்த எண்ணத்தோடு என்னை பார்க்க வராதீங்க.. சாட்டையை சுழற்றும் ராகுல் காந்தி.. டார்கெட் தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் 2024ல் புதிய முகங்களை களமிறக்க ராகுல் காந்தி முடிவு செய்து உள்ளாராம்.
சென்னை வந்த காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சத்தியமூர்த்திபவனுக்கு வந்தனர். இதில், மூன்று எம்.எல்.ஏ. க்கள் எம்.பி.தேர்தலில் போட்டியிட அஜோய்குமாரை தனிப்பட்ட முறையில் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அஜோய்குமார், இந்த எண்ணத்தோடு இனி என்னை சந்திக்கக் கூடாது. எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறீர்கள். அந்த தொகுதியில் மீண்டும் நாம் போட்டியிட்டால் காங்கிரஸ் ஜெயிக்குமா? எங்களால் பதில் சொல்ல முடியவில்லையில்லையா? தொகுதியை நல்லா வைத்திருக்க முயற்சியுங்கள். இந்த் முறை எம்.பி. தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார் என்று சொல்லி அந்த 3 பேரையும் கடுப்படுத்தியிருக்கிறார் அஜோய்குமார்.
சீட் ஷேரிங்: தேர்தலை நெருங்குவதால் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் சத்தியமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார் அஜோய்குமார். மாநில தலைவர் அழகிரி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டத்தில், திமுகவை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள் மாவட்ட தலைவர்கள்.
இந்த நிலையில், ''திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் ; அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்'' என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அஜோய் குமார்.
ஆலோசனைக்கூட்டம் குறித்து மாவட்ட தலைவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ''கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் சீட்டுகளை திமுகவிடம் கேட்டுப்பெற வேண்டும் ; வாரிசுகளுக்கு இந்த முறை சீட் கொடுக்கக்கூடாது; மாவட்ட தலைவர்கள் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு 50 சதவீதம் வாய்ப்புகள் தரவேண்டும் ; நம் கட்சி தொண்டர்களுக்கு திமுகவால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை ; கடந்த தேர்தலில் 60 இடங்களில் சொற்ப ஓட்டுகளில்தான் திமுக ஜெயித்தது. அதற்கு காங்கிரஸ் வாக்குகள்தான் உதவியது ; காங்கிரசை திமுக எதிரிக்கட்சி மாதிரிதான் ட்ரீட் பண்ணுது ;
மோடிக்கு நாம் கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டால் திமுகவுக்கு என்ன வந்தது ? காங்கிரஸ்காரர்களை வீட்டுக்காவலில் வைக்கிறது திமுக போலீஸ் ; காங்கிரசை அக்யூஸ்ட் மாதிரி திமுக நடத்துகிறது ; ரெக்கமண்ட் பார்த்து போட்டியிட வாய்ப்புத்தரக்கூடாது ; கட்சிக்காக காலம் காலமாக உழைப்பவர்களுக்கும் துரோகம் செய்யாதவர்களுக்கும் இந்த முறை வாய்ப்புத் தர வேண்டும் என்றெல்லாம் மாவட்ட தலைவர்கள் பேசினார்கள். ஆனால், திமுக ஆதரவாக பேசினார் கே.எஸ்.அழகிரி.
அதாவது, அதிக இடங்களில் நாம் போட்டியிட நினைப்பது நியாயமானதுதான். ஆனால், திமுகவை போல காங்கிரசின் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். கட்டமைப்பை வலிமைப்படுத்தாமல் கூடுதல் சீட் எப்படி கேட்கமுடியும்? பூத் கமிட்டியை கூட முழுமையாக நாம் செய்ய முடியவில்லையே? கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர் ஸ்டாலின். அதை நாம் மறந்து விடக் கூடாது என திமுக ஆதரவு நிலை எடுத்து பேசினார் கே.எஸ்.அழகிரி.
இறுதியில் பேசிய அஜோய்குமார், எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். நீங்க பேசுற தமிழ் எனக்கு புரியும். உங்க உணர்வுகளை மதிக்கிறேன். திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு பேசுவேன். நல்லது நடக்கும் . கவலைப்படாதீர்கள். இந்த முறை, புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தர மேலிடத்தில் பேசுவேன் என நம்பிக்கையாக சொன்னார் அஜோய்குமார்'' என்று ஆலோசனைக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துக்களை விவரித்தார்கள் மாவட்ட தலைவர்கள்.












Click it and Unblock the Notifications