அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு.. இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளிலும் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார்.

அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தினத்தையே, அரசியலமைப்பு தினமாக வருடந்தோறும் நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம்
சுதந்திர இந்தியாவில் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை அடைந்து. அரசியலமைப்பு சபை மூலம் ஏற்றுகொள்ளப்பட்டது. இந்த தினத்தை இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடி வருகிறோம். அரசியலமைப்பு சட்டம், இந்திய மக்களுக்கு அளிக்கும் உரிமைகள், கடமைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இறையாண்மை, சமூக, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக குடியரசு நாடு இந்தியா என்பதை உறுதிப்படுத்தி, நீதி, சுகந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை அனைத்து இந்திய மக்களுக்குமானது என்பதை அரசியலமைப்பு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.
"சம்விதான் திவாஸ்'" கொண்டாட்டம்
இந்நிலையில் "சம்விதான் திவாஸ்" என இந்தியில் அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் இன்று நாடாளுமன்றம், மாநில சட்டசபைகள், கோர்ட்டுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியலமைப்பின் முகவுரைகள் வாசிக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
இந்நாளின் சிறப்பை உணர்த்தும்வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ம் ஆண்டினையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு பிரத்யேகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில், "மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூக நீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும்.
அரசு ஊழியர்கள் - இன்று காலை 11 மணிக்கு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள்/ கருத்தரங்குகள்/ வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications