"50 வருட நட்புக்கு இதுதானா மரியாதை?" பாக்யராஜ் வீட்டில் முகம் சுளிக்க வைத்த செயல்.. CMக்கு ராதிகா வைத்த வேண்டுகோள்
சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலியில் நடந்த சில சம்பவங்கள் இன்னும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. நடிகை ராதிகா, அன்றைய தினம் நேரில் கையெடுத்துக் கும்பிட்டு வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது தனது சமூக வலைதள பதிவின் மூலமும் மனம் நொந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
பாக்யராஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை செலுத்த வந்தனர். ஆனால் அந்த நேரத்தில், சில யூடியூப் சேனல்கள் மற்றும் கேமரா குழுக்கள் வீட்டை முற்றுகையிட்டதால், துக்கத்தில் இருந்த குடும்பத்தினருக்கே நகர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

கையெடுத்து கும்பிட்ட ராதிகா
அப்போது அஞ்சலி செலுத்த வந்த நடிகை ராதிகா, ஆம்புலன்ஸில் இருந்து இறங்குவதற்கு முன்பே இரு கைகளையும் கூப்பி, "உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன்... சினிமா எங்க தொழில். உங்களுக்கு டிராமா வேணும்னா நாங்க நடிச்சு தர்றோம். ஆனால் தயவு செய்து இங்கே கொஞ்சம் பிரைவசி கொடுங்க. குடும்பத்தினர் துக்கத்தில் இருக்காங்க..." என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
ராதிகாவின் பதிவு
இந்நிலையில், இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா வெளியிட்ட பதிவு மீண்டும் பலரது மனதை தொட்டுள்ளது.
அதில், "50 ஆண்டுகளாக நீடித்த ஒரு அருமையான நட்புக்கு என்னுடைய இறுதி வழியனுப்புதல். ஒரு மிகச்சிறந்த படைப்பாளி... வளர்ந்த எழுத்தாளர்... சினிமாவுக்கே புதிய எல்லைகளை வரைந்த மனிதர். அவருடன் நான் பகிர்ந்து கொண்ட சிரிப்புகளும், வேலை அனுபவங்களும் என்றும் மறக்க முடியாதவை. எங்கள் குடும்பத்துக்கு எப்போதும் அமைதியாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் துணையாக நின்றவர் அவர்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியான பிரிவு. அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய ஒரு இடம், ஒரு சர்க்கஸ் போல மாறிவிட்டது. நாம் எப்போது இவ்வளவு இரக்கமற்றவர்களாக மாறினோம்?
இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு மற்றும் திரையுலகம் ஒன்றாக அமர்ந்து, இறுதி அஞ்சலிக்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். மறைந்தவருக்கு கடைசி வரை கண்ணியமும், மரியாதையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்." என்று மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பாக்யராஜ் இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவம்
ராதிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. "துக்கம் அனுசரிக்க வேண்டிய இடத்தில் கேமரா போட்டி தேவையா?", "மறைந்தவருக்கு கடைசி மரியாதை கொடுப்பதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்", "ராதிகா சொன்னது நூறு சதவீதம் சரி" என்று பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாக்யராஜின் மறைவு ஒரு திரைக்கதை மன்னனை மட்டும் தமிழ் சினிமா இழந்த நாள் அல்ல; ஒரு குடும்பத்தின் அன்பான கணவர், பாசமிகு தந்தை, உண்மையான நண்பர், பலருக்கு வழிகாட்டியாக இருந்த மனிதரை இழந்த நாள் என்றும் ரசிகர்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வேதனையின் நடுவே, "துக்கத்திற்கு கூட கொஞ்சம் தனிமை வேண்டும்" என்ற ராதிகாவின் வார்த்தைகள் தற்போது பலரது மனசாட்சியைத் தட்டியெழுப்பும் பதிவாக மாறியுள்ளது.














Click it and Unblock the Notifications