2500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை யாருக்கு? விருதுநகரில் கேட்டதுமே அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு தொண்டை வலி
விருதுநகர்: மகளிருக்கான ரூபாய் 2,500 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "தொண்டை சரியில்லை..." எனக் கூறிவிட்டு அமைச்சர் ஜெகதீஸ்வரி நழுவிய சம்பவம் இபபோது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தல் களம் முழுக்கக் கம்பீரமாக முழங்கப்பட்ட வாக்குறுதி குறித்து, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் பதில் சொல்ல முடியாமல் இப்படியொரு காரணம் சொன்னது பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் திமுக இதனை ரூபாய் 1,500-ஆக உயர்த்தித் தருவதாக அறிவித்திருந்தது; அதேநேரம் தவெக தனது 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் 60 வயதுக்குள் இருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது

இதையடுத்து அப்போதிருந்தே பெண்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.. தவெக அரசு அமைந்த பிறகு தொடங்கியுள்ள முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றபோது இந்த விவகாரம் குறித்து குரல் எழுப்பப்பட்டிருப்பதால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
அதேசமயம், யார் யாருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், அது குறித்த அனுமானங்களும் றெக்கை கட்டி பறந்து வருகின்றன.
2500 மகளிருக்கு எப்போது
கடந்த திமுக ஆட்சியில் 60 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் மகளிர் உரிமைத்தொகை பெற்று வந்த நிலையில், இப்போதைய முதலமைச்சர் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி இனி 60 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் பயனாளியாக நீடிக்க முடியாது.
இந்தத் திட்டத்தில் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதுடன், அதற்கேற்ப சில கூடுதல் விதிமுறைகளையும் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட தகுதியான பெண்கள் அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டங்களுக்குப் புதிதாக விண்ணப்பித்து, அதன் மூலம் வரும் மாதாந்திர தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எல்லா வகையிலும் தகுதியான உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே மாதம் 2,500 ரூபாய் சென்றடைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக இருப்பதால், யாருக்கு இந்தத் தொகை செல்ல வேண்டும் என்பதை மறுசீரமைக்கும் உத்தேச விதிமுறைகளை வகுப்பதில் அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
யார் யாருக்கு கிடைக்கும்
யாரும் மோசடியாகப் பயன் பெறக்கூடாது என்பதற்காக, புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படவுள்ளன.
இதற்காக பிரத்யேக ஆன்லைன் தரவுத் தொகுப்புகளை ஒருங்கிணைத்து, அதன் மூலம் விண்ணப்பிக்கும் பயனாளிகளின் தகவல்களைச் சரிபார்த்துத் தகுதியானவர்களைக் கண்டறிய அரசு முடிவெடுத்துள்ளதால், மகளிர் உரிமைத்தொகை ரூ. 2,500 வழங்குவதற்கு முன்பாக இத்திட்டத்தில் மிகப்பெரிய நிர்வாக மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிகிறது.
எனினும் அடிக்கடி தமிழக அமைச்சர்களிடம், எப்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டே வருகிறது.. சமீபத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மகளிருக்கான ரூபாய் 2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரப்போகும் நாட்களில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்திருந்தார்.
மகளிர் உரிமைத் தொகை 2500
இந்நிலையில் விருதுநகர் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற நாடு தழுவிய போலியோ சொட்டு மருந்து முகாமில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியைத் தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் கலந்துகொண்டு முறைப்படி தொடங்கி வைத்தார்.
அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமுகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்கள் அமைச்சரைச் சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். செய்தியாளர்கள் அமைச்சரிடம், "தேர்தல் களத்தில் தவெக வாக்குறுதி அளித்தபடி, மகளிருக்கான ரூபாய் 2,500 உரிமைத் தொகை எப்போது முதல் வழங்கப்படும்?" என்று கேட்டார்கள்.
தொண்டை சரியில்லை
இப்படியொரு கேள்வியை அமைச்சர் எதிர்பார்க்கவேயில்லை.. இதனால் ஒரு நிமிடம் திகைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, அதற்குப் பதில் அளிக்க விரும்பாமல், "எனக்குத் தொண்டை சரியில்லை..." என்று ஒரு காரணத்தைக் கூறி மழுப்பியவாறே, அங்கிருந்து சாமர்த்தியமாக எஸ்கேப் ஆகி காரில் ஏறிப் புறப்பட்டார்.
தேர்தல் சமயத்தில் கம்பீரமாக முழங்கப்பட்ட வாக்குறுதி குறித்து, தற்போதைய ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் பதில் சொல்ல முடியாமல் தொண்டை வலியைக் காரணம் காட்டி நழுவியது அரசியல் வட்டாரங்களிலும் சோஷியல் மீடியாவில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது...!!












Click it and Unblock the Notifications