எக்ஸ்பிரஸ் வேகத்தில் சிஎம் அலுவலகம்.. விஜயைப் பார்த்து வியக்கும் அதிகாரிகள்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. லஞ்சம் ஊழல் தவிர்த்து வெளிப்படையான, நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். தவெக மீது விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தாலும் அதிரடி அறிவிப்புகளும், சில மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அலுவலகத்திற்கு தினசரி காலை செல்லும் கோப்புகளை, தேங்க விடாமல், அன்றைய தினம் மாலைக்குள்ளாக கையெழுத்திடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 2 மாதங்களாக போகிறது. சினிமா படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்பே ஸ்பாட்டுக்கு செல்வது விஜயின் பழக்கம். அரசியலுக்கு வந்த பிறகும் அவர் டைம் மேனேஜ்மென்டில் அதே ஸ்டைலை கடைபிடிக்கிறாராம். இதுகுறித்து தலைமை செயலக அலுவலர்கள் கூறுகையில், "விஜய் தினசரி காலை 10 மணிக்குள் தலைமை செயலகத்திற்கு ஆஜராகிவிடுகிறார். மாலை 6 மணி வரை பணிகளை கவனித்து விட்டு வீடு திரும்புகிறார்.

முதலமைச்சர் விஜய்யின் மாறுபட்ட செயல்பாடு
மதிய உணவுக்காக அவர் வீட்டிற்கு செல்வதில்லை. உணவு எடுத்து வருகிறார். மதியம் உணவுக்கு பிறகு விஜய் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் மீண்டும் தன்னுடைய பணியை தொடர்கிறார். அமைச்சர்கள், பல்வேறு துறை செயலாளர்களிடம் இருந்து திட்டங்கள் செயலாக்கம், நிதி, ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோப்புகள் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு
வரும். அப்படி காலை அனுப்பப்படும் கோப்புகளில், விஜய் மாலைக்குள் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
இதனால் ஐஏஎஸ் அதிகாரிகளே ஆச்சர்யத்தில் உள்ளனர். நாங்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முதலமைச்சர்களிடம் பணியாற்றியுள்ளேன். அவர்கள் அனைவரிடம் இருந்தும் விஜய் மாறுபட்டவராக உள்ளார். மற்ற முதலமைச்சர்கள் தலைமை செயலகத்தில் இருந்தாலும் கட்சி, அரசியல் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். விஜய் அலுவலக நேரத்தில் தன்னுடைய முதலமைச்சர் மற்றும் அரசு நிர்வாக பணி மட்டுமே மேற்கொள்கிறார்.
கோப்புகளுக்கு மின்னல் வேகத்தில் கையெழுத்து
முந்தைய முதலமைச்சர்கள் தினமும் மாலை வரை சட்டமன்றத்தில் இருக்க மாட்டார்கள். விஜய் மாலை வரை தலைமை செயலகத்தில் இருக்கிறார். இதனால் மற்ற முதலமைச்சர்களை விட விஜய்க்கு கூடுதல் நேரம் கிடைக்கிறது. அதனால் கோப்புகளில் விரைந்து கையெழுத்திடுகிறார். முன்பெல்லாம் கோப்புகள் மாத கணக்கில் காத்திருந்த நிலை மாறி எக்ஸ்பிரஸ் வேகத்தில் மணிக்கு மணிக்கணக்கில் திரும்பி வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும், முன்னாள் முதலமைச்சர்களைவிட வேகமாக பணியாற்றினார்.
அவர் முதலமைச்சராக இருந்தபோதும் கையெழுத்துக்காக செல்லும் கோப்புகள் இரண்டு நாட்களுக்கு பிறகு தான் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு திரும்ப செல்லும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திட அமைச்சர்களிடம் கலந்தாலோசனை செய்து, அனுமதி பெற வேண்டிய நிலை கடந்த காலங்களில் இருந்தது. கமிஷன், பார்டி பண்ட் உள்ளிட்டவற்றால் முன்னாள் அமைச்சர்களிடம திட்டங்களை புரிய வைத்து அனுமதி பெறுவதற்கு கால தாமதம் ஏற்பட்டது.
அமைச்சர்களும் அதே வழியில்
தவெக ஆட்சியில் இந்த நிலை மாறியுள்ளது. முதலமைச்சரை போலவே, தவெக அமைச்சர்களும் கோப்புகளில் உடனடியாக கையெழுத்திடுகிறார்கள். முக்கியமாக அதிகாரிகள் முடிவு எடுப்பதற்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இதனால் கோப்புகள் தேங்குவதில்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் மேலும் வளர்ச்சி பாதைக்கு செல்லும்" என்றனர்.












Click it and Unblock the Notifications