யூடியூப்பை நம்பி வீட்டிலேயே பிரசவம்.. 2 குழந்தைகள் தாயை இழந்த பரிதாபம்.. திருப்பூரில் சோகம்
திருப்பூர்: யூடியூப் வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் மேற்கொள்ள முயன்ற பெண், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் எந்த தகவலாக இருந்தாலும் முதலில் பலரும் மொபைல் போனையும், சமூக வலைதளங்களையும் தான் நாடுகின்றனர். ஆனால், கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் போன்ற உயிர் தொடர்பான விஷயங்களில் யூடியூப் அல்லது சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை மட்டும் நம்பி முடிவெடுப்பது மிகுந்த ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய, கர்ப்ப பரிசோதனைகள் முதல் பிரசவம் வரை அனைத்து மருத்துவ நடைமுறைகளும் தகுதியான மருத்துவர்கள் மேற்பார்வையில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், யூடியூப் வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் மேற்கொள்ள முயன்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தைச் சேர்ந்த சசிகலா. இவரது கணவர் காரத்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சசிகலா இரண்டாவது குழந்தையை கருவுற்றிருந்தார். கடந்த ஜூன் 24-ஆம் தேதி வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் நடைபெற்றதில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், சசிகலாவிற்கு பிரசவத்திற்குப் பிறகு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, முதலில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சசிகலாவை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது ஊத்துக்குளி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications