திமுகவுக்கு எதிராக திரும்பும் தோழமை கட்சிகள்? விசாரணை வேண்டும்.. விசிக, இடதுசாரிகள் டிமாண்ட்!
சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் இதே கோரிக்கையை வைத்திருப்பது.. திமுகவுக்கு எதிரான நகர்வாக பார்க்கப்படுகிறது.
கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கு, கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 25ம் தேதி வெளியாகியுள்ளன. ரிசல்ட்டை பார்த்த தேர்வர்களுக்கு கடும் அதிருப்தி எழுந்திருந்திருக்கிறது. எனவே தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் உரிய விசாரணை மேற்கோள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

திருமாவளவனின் கோரிக்கை
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 'ஆசிரியர் தேர்வு வாரியம்,' கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
தேர்வில் முறைகேடு
உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ் -முதல் தாளில் ஒருவர் 150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் -இரண்டாம் தாளில் 50க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருவர் தமிழ்-முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது போல பலருக்கு நடந்துள்ளது.
தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி
பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது.
விசாரணை வேண்டும்
இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டிமாண்ட்
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக , கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அத் அத்தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த 2708 பணியிடங்களுக்கு 42,064 பேர் எழுதிய இந்தத் தேர்வுகளில் 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் பிப்ரவரி மாதம் வெளியிடப் பட்டது. மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளில் தான் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும். தகுதியுடையவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வுகளை எழுதினர். அவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது." என கூறியிருக்கிறார்.
திமுகவுக்கு நெருக்கடியா?
தமிழக உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி, காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு TN TRBக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது எனில், உயர்கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள். கடந்த திமுக ஆட்சியில்தான் தேர்வு நடந்திருக்கிறது எனில், விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் விசாரணை கோரி வைத்துள்ள டிமாண்ட் திமுகவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications