திருவள்ளூர் பெரியபாளையம் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு பரிந்துரை.. அதிகாரிகள் குழு தகவல்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயிண்ட் பட்டர் பால் என்ற தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மோனியா வாயு கசிவால் 16 பேர் உயிரிழந்த விவகாரம் காரணமாக சுற்றுச்சூழல் துறை இந்த முடிவினை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயிண்ட் பீட்டர் பால் என்ற தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 48 வயதாகும் ஜோசப் ஜெகன், 59 வயதாகும் மோகன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.

இங்கு இரவு மற்றும் பகல் என இரண்டு ஷிப்டுகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஒடிசா, பீகார், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இங்கேயே தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த ஜூலை 21ம் தேதி காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இது அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியதையடுத்து வாயுவை சுவாசித்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில அடுத்தடுத்து அவர்கள் மயங்கி விழுந்தார்கள். வாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் வந்தது. அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அன்றே 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 14 பேர் உயிரிழந்தனர். அதன்படி, இந்த விபத்தில் தற்போது வரை 16 பேர் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒடிசா, அசாம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்தில் பாதிக்கப்பட்ட 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 25 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவின் பேரில், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் மற்றும் பொது சுகாதார கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து. அதன்படி, இந்தக்குழு விசாரணை நடத்தி தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில், பெரியபாளையம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசுக்கு இந்தக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், மாநிலம் முழுவதும் அபாயகரமான ரசாயனங்களை பயன்படுத்தும் 1,774 தொழிற்சாலைகளை ஆய்வு செய்யவும் அந்தக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரியபாளையத்தில் இருப்பது போன்று சுமார் 60 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருவதாகவும், அந்த நிறுவனங்களில் தொடர் ஆய்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அந்தக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் போலீசார் தொழிற்சாலை உரிமையாளர்களான சென்னையைச் சேர்ந்த மோகன் (வயது 59), ஜோசப் ஜெகன் (48), மேலாளர் டேனியல் (68) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் 'எங்கள் தடயவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மாதிரிகளைச் சேகரித்துள்ளார். தொழில் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். அவர்களின் அறிக்கைகளை பெற்ற பிறகு, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம்' என்று தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications