Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை!
சென்னை: தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வால் வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கான மூலப் பொருட்களின் விலை உயர்வால் சிமென்ட் விலையும் உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் சொந்த வீடு கட்டக் கனவு காணும் நடுத்தர மக்களுக்குப் பேரிடியாக, அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட் (M-Sand) மற்றும் பி.சாண்ட் (P-Sand) ஆகியவற்றின் விலை திடீரெனக் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தத் திடீர் விலையேற்றம் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைத் தலைகீழாக மாற்றிவிடும் என வீடு கட்டுவோரும், கட்டுமான நிறுவனங்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகளுக்கு மிக முக்கியத் தேவையான மூன்று பொருட்களின் விலையும் யூனிட்டுக்கு தலா ரூ. 500 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ரூ 3300-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி ரூ 500 உயர்ந்து ரூ 3800-க்கும், ரூ 4000 விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 4500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.5000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் பி.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 5500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலையும் உயரும் அபாயம்!
ஜல்லி மற்றும் மணல் விலையேற்றம் மட்டுமல்லாமல், இவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் சிமெண்ட் உள்ளிட்ட இதர கட்டுமானப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பின்னடைவில் கட்டுமானத் துறை: ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் கட்டுமானத் துறை மந்தநிலையைச் சந்தித்து வரும் சூழலில், இந்தத் திடீர் விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. அடித்தளப் பணிகள் மற்றும் பூச்சுப் பணிகளுக்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானப் பொருட்கள் தங்கு தடையின்றிக் நியாயமான விலையில் கிடைக்கவும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக கனிமவளத் துறை அமைச்சர் டி.கே. பிரபு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருப்பதாவது: மணல், எம் சாண்ட் தட்டுப்பாடு என்ற பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. மாநில அளவில் குவாரிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் தீர்வு காணப்படும். கிரானைட் குவாரிகள் திறப்பது தொடர்பாக பகுப்பாய்வு செய்து வருகிறோம். மதுரை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் கனிமவளக் கொள்ளை நடந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தியுள்ளோம். குவாரி ஊழல் தொடர்பான அறிக்கைக்காக காத்திருக்கிறேன். எல்லா குவாரிகளிலும் ஆய்வு நடக்கும் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications