தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.. இர்பானால் சிக்கலில் மருத்துவர்? மருத்துவத் துறை அனுப்பிய நோட்டீஸ்
சென்னை: மருத்துவமனையில் பிறந்த தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதாக சர்ச்சையில் சிக்கிய இர்பான் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இர்பான் விவகாரம் தொடர்பாக அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதாவுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிரபல யூட்யூபரான இர்பானின் மனைவிக்கு, கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் பிரசவம் ஆகியிருக்கிறது. பின்னர் அவரது யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியானது.

அதில் கருவுற்ற தனது மனைவியுடன் இர்பான் பேசுவது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, அறுவை சிகிச்சைக்கு தயாராவது, பிரசவம் நடைபெற்றது என பல்வேறு காட்சிகள் இருந்தன.
இந்த நிலையில் வீடியோவில் 11வது நிமிடத்தில் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்ல வேண்டும். மேலும் கத்தரிக்கோல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும்.
ஆனால் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டியது சட்டப்படி தவறு என மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை பறந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மருத்துவ துறை அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூட்யூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து தானாகவே முன்வந்து யூட்யூபர் இர்பான் அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
தொடர்ந்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் பார்க்க சுகாதார துறை அதிரடியாக தடை விதித்தது. மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கவும் புதிதாக யாரையும் சிகிச்சைக்கு அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. மேலும் அந்த மருத்துவமனைக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே இர்பான் மீது எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? என தெளிவுபடுத்தும் படி ஊரக நலப் பணிகள் இயக்குனரகத்திற்கு செம்மஞ்சேரி போலீசார் கடிதம் எழுதினர். இந்த நிலையில் இர்பான் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவர் கைதாகலாம் எனவும் கூறப்பட்டது.
பின்னர் வெளிநாட்டில் இருந்தபடியே தனது வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் இர்பான். தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதால் நேரில் வர இயலவில்லை எனவும், உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை தமிழ்நாடு மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த இர்பான் தற்போது சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இர்பானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதாவிற்கு மீண்டும் சிக்கல் முளைத்திருக்கிறது. ஏற்கனவே அவரது மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மருத்துவம் பார்க்க தடை விதித்ததோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் வீடியோ எடுக்க அனுமதித்தது எப்படி? தொப்புள் கொடியை வெட்ட இர்பானுக்கு அனுமதி கொடுத்தது யார்? உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications