கூலி படத்தை சீண்டி.. தவெக அரசியலுக்கு வேட்டு வைக்கும் விஜய் ரசிகர்கள்.. தவறு பண்ணிட்டியே சிங்காரம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி (coolie) படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த கூலி படம் ஒருவகையில் நடிகர் விஜய்க்கும் அவரின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் சிக்கலாக முடியும் என்று வாதங்கள் வைக்கப்படுகின்றன.
கூலி திரைப்படம் முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டும் நிலை உள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், 'வார் 2' படத்துடன் மோதுகிறபோதிலும், முன்கூட்டிய முன்பதிவில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ரஜினியின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய ஆரம்ப வசூலை பதிவு செய்ய உள்ளது. லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்த்தும் இணையும் இந்தப் படம், கோலிவுட் வரலாற்றிலேயே 'லியோ'வின் முதல் நாள் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு சந்தையில் நாகார்ஜுனா, இந்தி சந்தையில் ஆமிர்கான், கன்னட சந்தையில் உபேந்திரா போன்றோரின் பங்களிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது படத்தின் மீதான வணிகரீதியான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், 'கூலி' படத்தின் தயாரிப்பு குழுவினர், நடிகர் தேர்வு விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர். தொடக்கத்தில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் தற்போது கடுமையான கிண்டல் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கூலி படம் விஜய் விமர்சனம்
இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். படம் பொதுமக்கள் இடையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் கூட விஜய் ரசிகர்கள் அதை கிண்டல் செய்யும் விதம் மோசமாக உள்ளது.
முக்கியமாக லோகேஷ் - விஜய் காம்போவில் வந்த லியோ படம் இதை விட நன்றாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் பலரும் தியேட்டர் வாசலில் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அவர்களின் இந்த விமர்சனம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கே சிக்கலாக மாற தொடங்கி உள்ளது. கூலி படம் ஓடும் திரையரங்குகளுக்கு வெளியே பல விஜய் ரசிகர்கள் படம் குறித்து கடுமையாக நெகட்டிவ் விமர்சனங்களை வைக்கின்றன.
கூலி படம் குறித்து யூ டியூப் சேனல்களிடமும் தொலைகாட்சி அலைவரிசைகள் மற்றும் செய்தியாளர்களிடமும் மிக கடுமையான எதிர்மறை விமர்சனங்களை வைத்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூலி படம் மூலம் வரும் சிக்கல்
கூலி படம் குறித்து விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில், மீம்ஸ்கள், கிண்டலான பதிவுகள் மற்றும் கடுமையான விமர்சனங்களுடன் கேலி செய்வது அதிகரித்துள்ளது. இது அரசியல் நோக்கர்கள் மத்தியில் TVK-விற்கு எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கலாம் என்ற கருத்தை எழுப்பியுள்ளது.
ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் இன்றும் வலுவான மற்றும் விசுவாசமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரஜினி ரசிகர்கள் தாங்கள் தாக்கப்பட்டதாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர்ந்தால், தேர்தல்களில் விஜய்யின் கட்சிக்கு எதிராக வாக்களித்து பழிவாங்கலாம் என்று கூறப்படுகிறது. இதை ரஜினி ரசிகர்களே தியேட்டர் வாசல்களில் பேட்டிகளில் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் தவறாக விமர்சனம் செய்தால்.. அவர்களிடம் போய் இதுக்குத்தான் உங்க கட்சியை எவனும் கண்டுக்கல.. நாங்க உங்களுக்கு வாக்கு அளிக்கணுமா , வேண்டாமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கூலி படம் - தமிழக வெற்றிக் கழக அரசியல்
மற்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் செயல்படுவது இது முதல் முறையல்ல. அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது, அவர்கள் அதை இணையத்தில் கேலி செய்தனர். பின்னர் படம் வெளியான போதும் அதை கிண்டல் செய்தனர். சூர்யா தனது ரெட்ரோ படத்தை வெளியிட்டபோதும் இதே போன்ற சம்பவங்கள் நடந்தன.
விஜய் அரசியல்
விஜய் என்னதான் போராட்டம் செய்யவில்லை, களத்திற்கு வரவில்லை என்று விமர்சனங்கள் இருந்தாலும் என்னதான் விஜய் அரசியலில் கொஞ்சம் சொதப்பினாலும் அவருக்கு அரசியலில் கொஞ்சம் குட் மார்க் கொடுக்கலாம். ஏனென்றால் அரசியலுக்கு புதிது. புதிதாக இப்படி எல்லாம் தவறுகள் சகஜம்தான். அவர் குட்டாக இருந்தாலும் அவரின் ரசிகர்கள் செய்யும் பேட் விஷயங்களால் அந்த கட்சி தற்போது அக்லியான நிலைக்கு.. அதாங்க அருவருப்பான நிலைக்கு செல்ல தொடங்கி உள்ளது.
நடிகர் விஜய் .. அரசியல்வாதி ஆக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். அவர் தவெக கட்சியை தொடங்கிய நிலையிலும் கூட.. அவரின் ரசிகர்கள் இன்னும் ரசிக மனோபாவத்தில் இருந்து வெளியே வராமல்.. சினிமா சண்டை போட்டுகொண்டு உள்ளனர். தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. இல்லை இல்லை ரசிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, அஜித்திற்கு எதிராக ரசிக ஹேஷ்டாக் சண்டை போட்டுக்கொண்டு உள்ளனர். அஜித்தின் குட் பேட் அக்லி படம் சமீபத்தில் வெளியானது. இது மாஸ்டர் படம் போன்ற விஜயின் டீசர் ரெக்கார்ட்களை முறியடித்து உள்ளது. அதேபோல் வசூல் ரெக்கார்டுகளிலும் அசதி உள்ளது. ஒரே நாளில் பல மில்லியன்ஸ் வியூஸ்களை பெற்றுள்ளது. வசூலிலும் கலக்கியது, இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. அதாவது விஜய் ரசிகர்கள்.. அந்த கிண்டல் செய்தனர். இப்போதே அதே செயலை கூலி படத்திற்கும் செய்கின்றனர்.
விஜய் அரசியலுக்கு சிக்கல்
தமிழ் சினிமாவில், இத்தகைய ரசிகர் சண்டைகள் பொதுவானவை. ஆனால் விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இந்த சண்டைகள் அவருக்கு எதிராக திரும்பும். தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் எப்போதும் நெருங்கிய தொடர்புடையவை.
ரசிகர் மன்றங்கள் பெரும்பாலும் தேர்தல்களில் அரசியல் தன்னார்வக் குழுக்களாக செயல்படுகின்றன. அரசியல் முடிவுகளையும் தீர்மானிக்கின்றன. பொது மக்களின் கருத்துகள் விரைவாக மாறக்கூடியவை. சில TVK உறுப்பினர்கள், மற்ற ரசிகர் பட்டாளங்களுடனான தேவையற்ற சண்டைகள், குறிப்பாக ரஜினிகாந்த் போன்ற வலிமையான ரசிகர் பட்டாளத்துடன் போடும் சண்டைகள், விஜய்யின் அரசியல் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே அவரது இமேஜை சேதப்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.
முக்கியமாக விஜய் ரசிகர்கள் போட்டி நடிகர்களை தொடர் விமர்சனம்.. கடுமையான பர்சனல் அட்டாக் கூட செய்கின்றனர். யார் செய்வது என்று ப்ரோபைலை பார்த்தால் அங்கே தவெக கொடி. மாஸ்டர் இப்போ வந்தால் அதைவிட பெரிய ஹிட் அடிக்கும். விஜயின் கடைசி படத்திற்கு பாருங்கள்.. எவ்வளவு வியூஸ் வருகிறது என்று.. அப்போ புரியும் என்று கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது விஜய் தனது ரசிகர்களை, தொண்டர்களை அதை பற்றி பேச வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும்.
ஆனால் விஜயும் அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் விஜய்.. தனது ரசிகர்களின் விளையாட்டுகளை கேள்வி கேட்காமல் இருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஒரு ரஜினி அல்லது அஜித் படம் வந்தால் போது விஜய் கட்சி காலி.. ரசிகர்களே கட்சியின் தோல்வியை உறுதி செய்துவிடுவார்கள் என்று கிண்டலடிக்கும் நிலையில்தான் அவரின் ரசிகர்களின் செயல் உள்ளது. சினிமா சார்ந்த போட்டிகளைத் தவிர்த்து, கல்வி மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ஊழலுக்கு எதிராகப் போராடுதல் போன்ற TVK-வின் வாக்குறுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று குரல்களும் எழும்புகின்றன.












Click it and Unblock the Notifications