சென்னை மேடவாக்கம் மேம்பாலம்.. தள்ளுவண்டி கடைகளில் மாமூல்.. வீடியோவில் சிக்கிய போலீசுக்கு வில்லங்கம்
சென்னை: சென்னையை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள், சிக்கன் பக்கோடா கடை உள்பட பல்வேறு சிறிய கடைகளில், இருசக்கர வாகனத்தில் வரும் ஒரு காவலர் மாமூல் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தாம்பரம் மாநகர காவல்துறை, 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறியுள்ளது.
சென்னை மற்றும் தாம்பரம் உள்பட பல்வறு பகுதிகளில் நடைபாதைகளில் தள்ளுவண்டிக் கடைகள், உணவு கடைகள், ஐஸ் விற்பது, காய்கறி விற்பது, சாலையை ஆக்கரமித்து கடைகளை வைத்திருப்பது, கடைகளில் இரவு நேரம் நீண்ட நேரம் வைத்திருப்பது போன்றவற்றை பார்த்திருப்பீர்கள். பொதுவாக சாலையில் ஆக்கிரமித்து கடைகள் வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இப்படிப்பட்ட கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால், விபத்து அபாயம் ஏற்படும் என்றால் போலீசார் உடனே அகற்றிவிடுவார்கள்.

அதேநேரம் ஒரு சில பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் கருதி அவர்கள் மீது பெரிய நடவடிக்கை எடுப்பது இல்லை.. ஏனெனில் சாலையோரம் எந்தநிரந்தர கட்டமைப்பும் இன்றி, சிறிய அளவு இடத்தில் தான் கடைகள் வைத்திருப்பார்கள். அவர்களின் அன்றாட வருமானமும் மிக குறைவாகவே இருக்கும்.
இவர்களை நம்பி குடும்பங்கள் இருக்கும்.. எனவே என்ன தான் சட்டப்படி தவறு என்றாலும், நெரிசல் இல்லாத பகுதிகளில் போலீசார் மனிதாபிமானத்துடன் விட்டுவிடுவார்கள்.. அதேநேரம் ஒரு சில காவலர்கள் அப்படி கடை வைத்துள்ளவர்களிடம் மாமூல் வசூலிப்பதும் உண்டு. அப்படிதான் மேடவாக்கத்தில் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள், சிக்கன் பக்கோடா கடை உள்பட பல்வேறு சிறிய கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைக்காரர்களிடம் காவலர்கள் சிலர், தினமும் மாமூல் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில நேற்று முன்தினம் இரவு மேடவாக்கம் பகுதியில் கடைக்காரர்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் போலீசார் மாமூல் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
குறிப்பிட்ட வீடியோவில் சீருடையில் இருசக்கர வாகனத்தில் வரும் ஒரு காவலர், கடை வியாபாரி ஒருவரிடமிருந்து இடது கையால் பணத்தை வாங்குகிறார். பின்னர் அதை தனது சட்டைப் பையில் போடும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், அவர்கள் மேடவாக்கம் காவல் நிலைய போலீஸ் ஏட்டு திருமுருகன் மற்றும் காவலர் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications