தமிழகத்திற்கு 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை - இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை
புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுகாதாரத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுகாதாரத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தடுப்பூசி பெற ஆர்வமாக உள்ள தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மக்களும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், நேற்று ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. செப்டம்பரில் இதுவரை 1,38,60,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், மத்திய அரசிடம் மொத்தம் 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டிருந்தோம், ஆனால் 28 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்து இருந்தது அதை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி 24 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நானும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளரும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தடுப்பூசிகள் குறித்து பேச இருக்கிறோம் என்றும் கூறினார். வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. வழக்கமாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு சுகாதாரத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுகாதாரத் துறை அதிகாரிகளால் பெறப்பட்டு குளிரூட்டப்பட்ட வாகனத்தில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மக்கள் தடுப்பூசி பெற ஆர்வமாக உள்ள தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications