எல்லாம் நன்றாக சென்றது.. ஏப்ரல் 28ல் நடந்த ஒரு திருப்பம்.. 7 நாளாக உயரும் கொரோனா கேஸ்கள்.. பின்னணி!
தமிழகத்தில் ஏப்ரல் 28ம் தேதியில் இருந்துதான் தினமும் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 28ம் தேதியில் இருந்துதான் தினமும் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரம் முன் தினமும் கொரோனா கேஸ்கள் மிகவும் குறைவாக பதிவாகி வந்தது. அதாவது நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் குறைவாக பதிவாகி வந்தது. 40, 50, 65, 25 என்ற எண்ணிக்கையில் இரண்டு வாரம் முன் கேஸ்கள் பதிவாகி வந்தது .
அதேபோல் இன்னொரு பக்கம் தினமும் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை 80, 90,85 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதனால் கொரோனாவில் இருந்து தமிழகம் தப்பிக்க போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். மக்களும் கொஞ்சம் நிம்மதி அடைய தொடங்கினார்கள்.

என்ன திருப்பம்
ஆனால் எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்த போதுதான் திடீர் என்று ஏப்ரல் 28ம் தேதி அந்த மோசமான திருப்பம் நடந்தது. திடீர் என்று ஏப்ரல் 28ம் தேதி தமிழகத்தில் அதுவரை இல்லாத எண்ணிக்கையில் கேஸ்கள் வர தொடங்கியது. ஏப்ரல் 28ம் தேதி 121 கேஸ்கள் தமிழ்நாட்டில் பதிவானது. அதுவரை பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் அன்றுதான் மிக அதிகமான கேஸ்கள் பதிவானது. மிக மோசமான ரெக்கார்டை அன்று தமிழகம் பதிவு செய்தது.

தொடர் அதிர்ச்சி
சரி ஒருநாள் எதாவது தவறு நடந்து இருக்கலாம். எங்காவது மொத்தமாக ஹாட்ஸ்பாட் பகுதியில் கொரோனா கேஸ்கள் வந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் விடாமல் தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கேஸ்கள் அதிகரித்தது. ஏப்ரல் 29ம் தேதி 104 கேஸ்கள், ஏப்ரல் 30ம் தேதி 161 கேஸ்கள், மே 1ம் தேதி 203 கேஸ்கள், மே 2ம் தேதி 231 கேஸ்கள் என்று வேகமாக எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா வேகம் எடுக்க தொடங்கியது.

விடாமல் அதிகரித்தது
அதன்பின்பும் விடாமல் அதிகரிக்க தொடங்கியது. மே 3ம் தேதிதான் இன்னொரு அதிர்ச்சி காத்து இருந்தது. ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தமிழகம் வேகமாக 2500 என்ற எண்ணிக்கையை தாண்டி சென்றது. இதன் பின்தான் கொரோனாவின் உண்மையான தீவிரம் உணர ஆரம்பித்தது. ஆனால் மூச்சு விடுவதற்குள் நேற்று இன்னொரு ரெக்கார்ட் கேஸ்களை தமிழகம் பதிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மொத்தம் எத்தனை
இதனால் தமிழகத்தில் மொத்தமாக 3550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இப்படி 27ம் தேதியில் இருந்து கொரோனா கேஸ்கள் அதிகரிக்க நிறைய காரணங்கள் இருக்கிறது. மொத்தம் இப்படி கேஸ்கள் அதிகரிக்க 5 விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம்
தமிழகத்தில் கேஸ்கள் அதிகரிக்க முதல் காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். கண்டிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்தான் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க கேஸ்கள் அதிகரிக்க காரணம். கடந்த 27ம் தேதி கோயம்பேட்டில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு மறுநாளில் இருந்து தமிழகத்தில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து தமிழகம் முழுக்க பல மாவட்டங்களுக்கு கோடம்பாக்கம் மூலம் கேஸ்கள் பரவி உள்ளது.

இரண்டாவது காரணம்
முதல் காரணம் இப்படி இருக்க சென்னையில் கொரோனா கேஸ்கள் பரவ இன்னொரு காரணமும் உள்ளது. சென்னையில் ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட திருவல்லிக்கேணி பகுதிகளில் தன்னார்வலர் அமைப்பு மூலம் உணவு வழங்கியதில் கொரோனா பரவி உள்ளது. அங்கு தன்னார்வலர் ஒருவர் மூலம் 56 பேருக்கு கொரோனா பரவியது. அந்த 56 மூலம் 30க்கும் அதிகமானோருக்கு காண்டாக்ட் நபர்களுக்கு கொரோனா பரவியது. இவர்களின் தொடர்பு மூலம் இன்னும் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தன்னார்வலர் அமைப்பு
இப்படி தன்னார்வலர் அமைப்பு மூலம் திருவல்லிக்கேனி பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியது என்று தெரியவில்லை. சென்னையில் காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் அதிகம் பரவ இது முக்கிய காரணம் ஆகும். அதேபோல் காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் அதிகம் பரவ கோயம்பேடும் ஒரு காரணம் ஆகும். இதனால் சென்னையில் இனி காண்டாக்ட் டிரேசிங் பலன் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது காரணம்
தமிழகத்தில் இப்படி கேஸ்கள் அதிகரிக்க சென்னையும், சென்னையில் கடந்த 25ம் தேதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பேனிக் பையிங் செய்ததும்தான் காரணம் என்கிறார்கள். கடந்த 25ம் தேதி மக்கள் ஹாட் ஸ்பாட் பகுதி தொடங்கி கண்டெயின்மெண்ட் பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் பொருட்களை வாங்க குவிந்தனர். சென்னையில் நடந்த பிரச்சனை தற்போது விளைவுகளை காண்பிக்க தொடங்கி உள்ளது. தினமும் கேஸ்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

காரணம் 4
அதேபோல் தமிழகத்தில் இப்படி கேஸ்கள் அதிகமாக கொரோனாவின் அறிகுறி இல்லாத குணமும் ஒரு காரணம் ஆகும். ஒரு வீட்டில் இருக்கும் நபருக்கு கொரோனா இருந்தும் அறிகுறி இருப்பது இல்லை. அவர் வீட்டில் இருக்கும் நபர்களுடன் சகஜமாக பழகி கொரோனாவை அவருக்கே தெரியாமல் பரப்புகிறார். வீட்டில் வேறு ஒருவருக்கு அறிகுறி வந்து சோதனை செய்தால், வீட்டில் எல்லோருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. சென்னையில் இப்படி பல வீடுகளில் இருக்கும் எல்லோரும் கொத்து கொத்தாக கொரோனா காரணமாக பாதிக்கப்படுவது நடக்கிறது.

ஐந்தாவது காரணம்
அதேபோல் இன்னொரு பக்கம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. புதிய நோயாளிகள் நிறைய பேர் வந்து அவர்களை கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் பழைய நோயாளிகளுக்கு வேகமாக சிகிச்சை அளித்து முன்பு போல அவர்களை குணப்படுத்த முடியவில்லை. சென்னையில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவும் கேஸ்கள் அதிகமாக இருக்க காரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications