சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த 5-வது நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த 5-வது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 50க்கும் மேல் உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் 44 பேர் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 5-வது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர் ஆவார்.

பெண்ணுக்கு கொரோனா
கடந்த மாதம் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் துணிக்கடையில் பணியாற்றிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த வளாகத்தில் பணியாற்றியவர்களில் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டார்கள்.

மாநகராட்சி வேண்டுகோள்
அப்போது லைப்ஸ்டைல் ஷோரூமுடன் தொடர்புடைய மற்றொருவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் பீனிக்ஸ் மால் வணிக வளாகத்திற்கு மார்ச் 10ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை சென்று வந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்

மாலுக்கு சென்றுவந்தவர்கள்
இந்நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலுக்கு குறிப்பிட்ட கடைக்கு சென்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்தில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்று சென்னை மாநாகராட்சி அண்மையில் தெரிவித்தது. ஆனால் வேளச்சேரி மாலிற்கு சென்று சென்னை சௌகார்பேட்டை மிண்ட் தெருவை சேர்ந்த கணவன், மற்றும் அவரது மனைவி ஆகியோர் காய்ச்சல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா இருப்பதைகண்டுபிடித்தனர்.

பலரும் தனிமை
இதையடுத்து தம்பதிகளின் குழந்தைகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த தம்பதியுடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து சுகாதரத்துறை அதிகாரிகள் விசாரித்து தனிமைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் அந்த தம்பதி வசித்த
மிண்ட் தெருவை மூடி சீல்வைத்தனர். அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு வளைத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

செஞ்சி நபருக்கு கொரோனா
இந்நிலையில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்குச் சென்றதால் தற்போது ஐந்தாவது நபராக செஞ்சி பகுதியைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது. அவர் வசித்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications