சென்னையில் மட்டும்தான் இப்படி.. 80% பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை.. ராதாகிருஷ்ணன் சொன்ன விளக்கம்!
சென்னை: இந்தியாவில் சென்னையில் அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது, சென்னையில் மட்டும்தான் இப்படி வேகமாக சோதனைகள் நடக்கிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா கேஸ்கள் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் 363 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் 5637 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். சென்னையில் நடக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசினார்.

பேட்டி அளித்தார்
அவர் தனது பேட்டியில், மக்கள் கண்டிப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். கை கழுவ வேண்டும். சென்னையில் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ராயபுரத்திற்கு தனியாக திட்டம் வகுத்து இருக்கிறோம். அங்கு கேஸ்கள் அதிகமாக இருக்கிறது. தனி தனியாக ராயபுரத்தை பிரித்து சோதனை செய்து வருகிறோம். மொத்தமாக ராயபுரத்தை சுத்தப்படுத்தி வருகிறோம். பிரித்து பிரித்து சுத்தம் செய்கிறோம்.

உணவு முக்கியம்
மக்களுக்கு சாத்தான உணவு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கோயம்பேடு காரணமாக கோடம்பாக்கம், வளசரவாக்கத்தில் அதிக கேஸ்கள் வருகிறது. தொற்று அதிகம் உள்ள கோடம்பாக்கம் வளசரவாக்கம் மண்டலத்தில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிப்பு நடத்தி வருகிறோம். எங்கெல்லாம் கொரோனா இருக்கிறதோ அதே தெருவை எல்லாம் கண்காணித்து வருகிறோம்.

அதிகம் வர வாயப்புள்ளது
குடிசைப்பகுதிகளில் நோய் இருக்கிறதா என கண்டறிந்து சிகிச்சை அளிக்க திட்டம் போடப்பட்டுள்ளது. 2000 குடியிருப்புகளில் சோதனை செய்ய உள்ளோம். இங்கு கொரோனா கேஸ்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் இதை செய்ய இருக்கிறோம். நோய் கட்டுப்பாட்டு பகுதியை சீரமைத்து வருகிறோம். 100க்கும் அதிகமான கட்டுப்பாட்டு பகுதிகளில் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது.

கொரோனா அறிகுறி இல்லை
சென்னையில் 80% அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. 20 - 60 வயது கொண்டவர்களில் 77% பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தினமும் டிஸ்சார்ஜ் அதிகரிக்கிறது. வரும் நாட்களில் 200க்கும் அதிகமான நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். டிஸ்சார்ஜ் விரைவில் அதிகமாக்கப்படும். பெரிய குறிக்கோளோடு நாங்கள் பணிகளை செய்து வருகிறோம்.

டெஸ்ட் அதிகம்
இந்தியாவில் சென்னையில்தான் அதிகமாக 70 ஆயிரம் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமே இப்படி நடக்கிறது, வேறு எங்கும் இப்படி நடக்கவில்லை. மிக வேகமாக டெஸ்ட்களை செய்து வருகிறோம். யாரும் இவ்வளவு டெஸ்ட்களை செய்யவில்லை. சென்னை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1% பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications