3 நாளிலேயே கொரோனா ஒழிஞ்சிரும்னு ஆருடம் சொன்னாரே முதல்வர்.. திருப்பி போட்டு தாக்கும் ஸ்டாலின்..!
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை: 3 நாளில் தமிழகத்தில் தொற்று ஒழிந்துவிடும் என்று முதலமைச்சர் ஆருடம் சொல்லி இருந்தாரே.. இப்போது தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... நரம்பியல் மருத்துவர் இறந்துள்ளார். இத்தகைய சூழலில் டாக்டரின் உயிரிழப்பு என்பது, வைரஸ் பரவலைத் தடுப்பதில் அதிமுக அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் மிகவும் வலியுறுத்துகிறது" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவைரஸ் பரவல் தொற்று அபாயம் ஒரு பக்கம் இருந்தாலும், அரசியல் ரீதியான விமர்சனங்களும் இந்த விவகாரத்தில் நிலவி வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் குறை சொல்லியே அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்திருந்தாலும், எதையும் பொருட்படுத்தாது நிலைமையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார்.

எடப்பாடியார்
3 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் வைரஸ் தொற்று ஒழிக்கப்பட்டுவிடும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. எடப்பாடியார் இவ்வாறு சொன்னதற்கு அடுத்த நாளே ஸ்டாலின் தன் அறிக்கையில், "இன்னும் 3 நாளில் ஒழிக்கப்பட்டு, ஜீரோவாக ஆகிவிடும்" என்று, "ஏதோ, சூ...மந்திரக்காளி" போல, முதலமைச்சர் சொல்கிறார் என்றால்; இவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா, அல்லது அருகில் இருப்போர் சரியான தகவல்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவில்லையா, என்றுதான் மருத்துவ நிபுணர்கள் கேட்பார்கள்" என்று குறிப்பிட்டு காட்டி கேள்வி எழுப்பியிருந்தார்.

முக ஸ்டாலின்
எனினும் தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகி உள்ளது.. சென்னையில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. இந்நிலையில், திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது.

மருத்துவர்
சென்னையை அடுத்த வானகரத்தில் ஒரு தனியார் மருத்துமவனையில் கோவிட்-19 வைரஸ் பாசிட்டிவ்வால் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அந்தச் சோக நிகழ்வுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், டாக்டர் குடும்பத்தார்க்கு இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோரப்பிடி
கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்டோர் அதே நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், அதுபோலவே, ‘ஊரடங்கு' காவல் பணியில் இரவு பகல் பாராது எந்நேரமும் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

ஊடகம்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஒழிந்துவிடும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16.4.2020 அன்று வர்க்க பேத ஆரூடம் கணித்து அறிவித்திருந்த நிலையில், நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பரிசோதனை கருவி
இத்தகைய சூழலில் மருத்துவரின் உயிரிழப்பு என்பது, வைரஸ் பரவலைத் தடுப்பதில் அ.தி.மு.க. அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் மிகவும் வலியுறுத்துகிறது. விரைவு பரிசோதனைக் கருவிகள் வாயிலாக உரிய முறையிலும் மிகப் பரவலாகவும் சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் தடுப்பு மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

கடமை
பொதுமக்களையும் மருத்துவர்கள் - காவல்துறையினர் - தூய்மைப் பணியாளர்கள் - ஊடகத்தினர் உள்ளிட்ட மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் முக்கியமான கடமையை ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கின் விதிமுறைகளை, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், முழுமையாகக் கடைப்பிடித்து, தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications