லாக்டவுன்...நின்றது திருவிழாக்கள்.. சொற்ப வருவாயும் கிடைக்காமல் பரிதவிக்கும் கிராமப்புற கலைஞர்கள்
சென்னை: லாக்டவுனை முன்னிட்டு பங்குனி உத்திரம் தொடங்கி பல்வேறு திருவிழாக்கள் அடுத்தடுத்து நடைபெறாமல் கைவிடப்பட்டன. இதனால் இந்த திருவிழாக்களை நம்பிய கிராமப்புற கலைஞர்களின் சொற்ப வருவாயும் கிடைக்காத பரிதாப நிலை உருவாகி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுனால் தொழில்துறை முடங்கியிருக்கிறது. லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கும் நிலையால் நிறுவனங்கள் வருவாய் இழப்புக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
இதனால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை உருவாகி இருக்கிறது. தற்போதைய லாக்டவுன் நீட்டிப்பால் ஏற்பட்டிருக்கும் தேக்கநிலையை தொழில் நிறுவனங்கள் எப்படி சமாளித்து மீளப் போகின்றன என்பது பெரும் கேள்விக்குறி. பல லட்சம் தொழிலாளர்கள் தங்களது வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

கிராமப்புற கலைஞர்கள்
இந்நிலையில் லாக்டவுனால் கிராமப்புறங்கள் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல பல்வேறு துறைசார்ந்தவர்களையும் பரிதவிக்க வைத்திருக்கிறது. விவசாயிகளுக்காவது ஓரளவு தளர்வு கிடைத்து வருவது சற்று ஆறுதலைத் தருகிறது. ஆனால் இந்த பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறும் ஊர் திருவிழாக்கள், அதனை சார்ந்த கிராமப்புற கலைஞர்களின் வருவாய் ஆகியவற்றையும் லாக்டவுன் பறித்துக் கொண்டிருக்கிறது.

இசைக் கலைஞர்கள் வருவாய்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கிராமங்களில் 100 பேர் 200 பேர் கூட்டாக மாலை அணிந்து முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இம்முறை ஒட்டுமொத்தமாக பங்குனி உத்திர திருவிழாக்களே இல்லை என்றாகிவிட்ட நிலையில் இதனை ஒட்டிய கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள், இசைக் கருவி கலைஞர்கள் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

கலை நிகழ்ச்சிகள்
பங்குனியைத் தொடர்ந்து சித்திரை மாத திருவிழாக்களும் கிராமங்களில் களைகட்டும். பல்வேறு கிராமங்களில் குலதெய்வ வழிபாட்டு காலமாக சித்திரை 10 கடைபிடிக்கப்படும். வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த சித்திரை 10 திருவிழாக்களும் லாக்டவுனில் சிக்கிக் கொண்டன. இதனால் சித்திரை 10 திருவிழாக்களை நம்பியிருக்கும் அத்தனை கிராமப்புற கலைஞர்களின் வருவாயில் மண் விழுந்திருக்கிறது.

நடிகர்கள் வாழ்க்கை
இந்த கோடை மாதங்களில் கிராமங்களில் ஊர்சாமி கும்பிடுதல் திருவிழாக்கள் பெரும் விழாக்களாக நடைபெறும். இந்த காலகட்டங்களில் கிராமப்புற நாடக கலைஞர்கள், கச்சேரி கலைஞர்களை பிடிக்கவே முடியாது.. அந்த அளவுக்கு பிசியாக இருப்பார்கள். இப்போது அவர்கள் பசிக்கே வழியில்லாத பெரும் துயரை தந்திருக்கிறது இந்த கொரோனா லாக்டவுன் காலம்.












Click it and Unblock the Notifications