தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது..கோர்ட் கூறியது எங்களுக்கு வெற்றி.. ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பது எங்களுக்கான மிகப்பெரிய வெற்றி என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து நாங்கள் குரல் எழுப்பியிருக்கிறோம். இதை ஆராய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை ஆராயும் வரை தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பது கண்டிப்பாக எங்களுக்கான மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரித்தது.
நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக தரப்பில் பரபரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

தேர்தலுக்கான நடைமுறைகள் தொடரலாம்
இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த பிரதான வழக்கின் விசாரணை வரும் மார்ச் 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் 24 ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அதிமுக பொதுச்செயலளார் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடரலாம் என்றும் தேர்தல் முடிவை வெளியிட வேண்டாம் என்றும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

நாங்கள் குரல் எழுப்பியிருக்கிறோம்
இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மனுவினை முழுமையாக விசாரித்து தீர்ப்பினை அறிவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து நாங்கள் குரல் எழுப்பியிருக்கிறோம்.

நியாயம், தர்மம் எங்கள் பக்கம் உள்ளது
இதை ஆராய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை ஆராயும் வரை தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பது கண்டிப்பாக எங்களுக்கான மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். நியாயம், தர்மம் எங்கள் பக்கம் உள்ளது. எங்களை நீக்குவதற்கு இபிஎஸ் யார்? கூவத்தூரில் இருந்த ஒரு கும்பல் எங்களை நீக்கினால் அந்த நீக்கம் செல்லுமா? ஆகவேதான் நீதிமன்றத்தை நாடி எங்கள் உரிமையை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம்.

போட்டியிட தயார்..
வாக்காளர் பட்டியலே இல்லை. இப்போது நடப்பது தேர்தலா? அல்லது ஓபிஎஸ் சொன்னது போல பிக் பாக்கெட்டா என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தேர்தல் வைத்தால் நானும்(ஓபிஎஸ்) இபிஎஸ் உடன் போட்டியிட தயார் என்று என்றைக்கோ சொல்லி விட்டார். இதுவரை அதற்கான பதில் இல்லை. நியாயம் தர்மம் வெல்லும் வரை எங்கள் சட்ட போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications