"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!
சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எங்களுக்கு பலமுள்ள தொகுதிகளை கொடுத்திருந்தால் நாங்கள் 6 தொகுதிகளிலும் வென்றிருப்போம். அதற்காக இந்த முறை தொகுதி எண்ணிக்கை குறைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விளக்கியுள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. வரும் மே 4 ஆம் தேதி வாக்கு என்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. ஒரு வேளை ராமதாஸ் பாமகவும் சசிகலாவின் புதிய கட்சியும் இணைந்து போட்டியிட்டால் 5 முனை போட்டி நிலவும்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இதுவரை 43 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூடுதல் தொகுதிகளை கேட்டிருந்தன. ஆனால் திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் வந்துவிட்டதால் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு தொகுதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இரட்டை இலக்கத்தில் கேட்டிருந்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நீண்ட நாட்களுக்கு இழுபறியில் இருந்தது. அந்த வகையில் 5 தொகுதிகள் என்று இந்திய கம்யூனிஸ்ட் திமுகவுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது.
விசிகவும் அதிக தொகுதிகளை கேட்ட நிலையில் குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிடும் நிலை இருப்பதாக திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில் நீண்டகாலமாக பயணித்து வருகிறோம்.
நாங்கள் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டிருந்தோம். இது தொடர்பாக கடந்த 20 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். இந்த நிலையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டத்தில் இரட்டை இலக்கம் வேண்டாம், கடந்த முறை போட்டியிட்ட போல் 6 தொகுதிகளை கேட்டு பெறுமாறு தெரிவித்துள்ளார்கள்.
இதை நாங்கள் முதல்வரிடம் தெரிவித்தோம். முதல்வரும், தற்போது நிறைய கட்சிகள் இருப்பதால் 5 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறார். இதை எங்கள் கட்சி மேலிடத்தில் சொல்வோம். அவர்கள் 5ஐ ஏற்கலாம் என சொன்னால் ஏற்போம். இல்லாவிட்டால் மீண்டும் திமுகவிடம் பேசுவோம். அதற்காக தொகுதி எண்ணிக்கைக்காக நாங்கள் கூட்டணியை விட்டு வேறு கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு 2 ல் மட்டும் வெற்றி பெற்றதால்தான் இந்த முறை தொகுதியை குறைக்குமாறு திமுக சொல்கிறதா என கேட்டார். அதற்கு பெ.சண்முகம் கூறுகையில், அப்படியில்லை, கடந்த முறை எங்களுக்கு பலமுள்ள தொகுதிகளான கோவை உள்ளிட்ட தொகுதிகளை கொடுத்திருந்தால் நாங்களும் 6 தொகுதிகளிலும் வென்றிருப்போம். இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications