அந்த விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலினே உறுதி தந்துட்டாரே.. வரவேற்கிறோம்.. இரா.முத்தரசன் பாராட்டு
முதல்வர் ஸ்டாலினின் கல்வி திட்ட விளக்கத்தை இரா முத்தரசன் வரவேற்றுள்ளார்
சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த போவதில்லை என்று முதல்வர் உறுதிப்படுத்தி உள்ளதுடன், மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2 நாளைக்கு முன்பு தொடங்கி வைத்தார்...
இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளக்கம்
ஆனாலும் இந்த திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன... சோஷியல் மீடியாவில் விவாதங்களும் எழுந்தன.. குறிப்பாக, மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும்,
ஆர்எஸ்எஸ்சின் அஜென்டா இது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே ஒரு விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அனுமதி
அதில், "இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும்.. இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும், அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள 86,550 பேரின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். வருகிற கல்வியாண்டில் 1 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று தெளிவுபடுத்தி இருந்தார்.

விளக்கம்
முதல்வர் தந்த இந்த விளக்கத்துக்குதான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்... இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "இல்லம் தேடி கல்வி திட்டத்தை விளக்கி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை மதிப்பு மிக்கதாகும். இதன் மூலம் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று முதல்வர் உறுதிப்படுத்தி உள்ளார். மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

பரிசீலனை
அரசு பள்ளிகளில் மேலும் ஒரு லட்சம் மாணவர்களை சேர்க்கும் இலக்குடன் செயல்படுவதாக முதல்வர் கூறியுள்ளார்.. மாற்றுக் கருத்துக்களை பரிசீலித்து விழிப்புடன் இருப்பதாக விளக்கம் தரும் பொறுப்புணர்வு மெச்சத்தக்கது. அரசின் உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்கும்"என்று உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications