ஓவராக கேட்கும் துப்பாக்கி சத்தம்.. என்கவுன்ட்டர்கள் அதிகரித்திருப்பது நல்லதல்ல! சிபிஎம் சாடல்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் இது மூன்றாவது என்கவுன்ட்டர். இந்நிலையில், தமிழ்நாட்டில் சமீப காலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்திருப்பது நல்லதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டார். புது ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண், "ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பதிலளிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு உட்பட, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி என பலர் கைது செய்யப்பட்டனர். இதில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கடம் என்பவர் போலீசாரால் ஜூலை 14ம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடந்த முதல் என்கவுன்ட்டர் இதுதான்.
வழக்கு விசாரணை வேகமெடுத்த நிலையில், மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின்போது இரண்டாவது என்கவுன்ட்டர் நடந்தது. இதில் காக்கா தோப்பு பாலாஜி கொல்லப்பட்டார். 58 வழக்குகள் பாலாஜி மீது நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து விளக்கமளித்த போலீஸ், "வாகன சோதனையின்போது கார் ஒன்று நிற்காமல் சென்றது. அதை மடக்கி பிடிக்க முயன்றபோது, எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு நாங்கள் சுட்டதில், பாலாஜி உயிரிழந்தார்" என்று தெரிவித்திருந்தனர்.
அடுத்தடுத்து நடந்த இரண்டு என்கவுன்ட்டர்கள் சென்னை போலீஸ் மீதான விவாதங்களை கிளப்பியிருந்தது. குற்றங்களுக்கு தோட்டாக்கள் மூலம்தான் தண்டனைகள் என்றால், சட்டமும், நீதிமன்றமும் எதற்கு? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த சலசலப்புகள் ஓய்வதற்கு மூன்றாவது என்கவுன்ட்டர் நடந்திருக்கிறது.
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நண்பன் சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தார். அவரை தேடிவந்த தனிப்படை போலீசாருக்கு, ராஜா ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாக டிப் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ராஜாவை போலீஸ் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறது. ராஜா பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கிருந்து பெறப்பட்டன? அவை எங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை காண்பிப்பதாக கூறி, ராஜா காவலர்களை நீலாங்கரைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டிருக்கிறார். பதிலுக்கு காவல்துறையினர் சுட்டதில் ராஜா உயிரிழந்திருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இது மூன்றாவது என்கவுன்ட்டர். சென்னை காவல் ஆணையராக அருண் பதவியேற்ற பிறகு நடந்த மூன்றாவது என்கவுன்ட்டரும் இதுதான்.
என்கவுன்ட்டர் குறித்து சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பியது போய், இப்போது திமுக கூட்டணி கட்சியே வெளிப்படையாக பேசியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்டத்தில் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் சமீப காலமாக என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது. இதற்கு காவல் துறையினர் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications