”தூத்துக்குடியின் ஜாலியன் வாலாபாக்” எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை தேவை.. ஜவாஹிருல்லா!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

ஜவாஹிருல்லா பேச்சு
அதில் மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா பேசுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த 100வது நாளிலே நடைபெற்ற தூத்துக்குடியின் ஜாலியன் வாலாபாக் என்று சொல்லக் கூடிய அளவிற்கு மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்த அருணா ஜெகதீசனின் விசாரணை ஆணையம் அறிக்கை வெளியிடப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை
அந்த அறிக்கை பல்வேறு காரணங்களுக்காக வரலாற்று சிறப்புமிக்கது. அருணா ஜெகதீசனின் அறிக்கையில் காவல்துறை பொறுப்பை கைவிட்டது, வருவாய் துறையும் இல்லை, மக்களை காக்க வேண்டிய 108 ஆம்புலன்ஸும் இல்லாத சூழலில், தமுமுக மற்றும் நல்லதம்பி மருத்துவமனை ஆம்புலன்ஸ் செய்த செயல்களை பாராட்டியுள்ளார். இவர்களின் சேவை இல்லையென்றால் அந்நேரத்தில் பல உயிர்களை மேலும் இழக்க நேரிட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை வெளிப்படுத்தியுள்ளது
கடந்த 40 ஆண்டுகளில் மனித உரிமை அமைப்புகள், இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கும் போது வழக்கமாக கீழ் நிலையில் இருக்கக்கூடிய போலீசாரை மற்றுமே விசாரிப்பார்கள். அவர்கள் மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் இருக்கும். ஆனால் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை ஐஜியில் இருந்து டிஐஜி, எஸ்பி வரை தெளிவாக குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகளையும் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், காவல்துறை டிஜிபி, தலைமைச் செயலாளரும், உளவுத்துறை தலைவர் என அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்பதை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னார்கள் என்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

முழு பொறுப்பும் இபிஎஸ் தான்
ஆனால் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொலைக்காட்சியில் பார்த்துதான் தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் குறித்து தெரிந்துகொண்டேன் என்று குறிப்பிடுகிறார். இதற்கு முழு பொறுப்பும் எடப்பாடி பழனிசாமி தான். காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போல், எங்களின் கோரிக்கை எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

இபிஎஸ் மீது குற்றவியல் நடவடிக்கை
காவல்துறை மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கடமையை செய்ய தவறிவிட்டார். இந்த 13 பேர் உயிரிழப்பிற்கும், தூத்துக்குடி ஜாலியன் வாலா பாக்குக்கும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications