சென்னையில் திடீரென அதிகரித்த சிஆர்பிஃஎப் படை வீரர்கள் நடமாட்டம்.. பரபர பின்னணி
சென்னை: சென்னையில் திடீரென மத்திய தொழிற்பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் சி.ஆர்.பி.எப். படையினரின் நடமாட்டம் அதிகரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து ஏராளமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் திடீரென சோதனைக்காக புறப்பட்டு உள்ளார்கள். 30 க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று உள்ளதாகவும், துப்பாக்கி ஏந்திய நிலையில் அவர்கள் வாகனங்களில் சென்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் தமிழ்நாடு அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டபோது அதிகாரிகளின் பாதுகாப்புக்காக வேண்டி சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திடீரென சென்னையில் சிஆர்பிஎப் வீரர்களின் நடமாட்டம் அதிகரிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனையின்போது பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து தமிழ்நாட்டில் அடிக்கடி அமலாக்கத்துறை சோதனை மற்றும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 30 க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையின் அடிப்படையில் இன்று நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தியாவை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் சென்னை சாஸ்திரி பவனில் இருந்து 10க்கும் அதிகமான வாகனங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளும், 2 வாகனங்களில் சிஆர்பிஎப் வீரர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று உள்ளார்கள்.
அமலாக்கத்துறை சோதனைக்காகவே சிஆர்பிஎப் படை குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படும் நிலையில் மதிய நேரத்தில் சிஆர்பிஎப் படையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனங்கள் பிரிந்து சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 30க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சென்று இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுபோல் எந்த சம்பவமும் இன்று காலை முதல் நடக்கவில்லை. இந்த நிலையில், அந்த அதிகாரிகள் யாரை குறிவைத்து சோதனைக்கு செல்கிறார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. முன்னதாக இன்று சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு நகைக்கடை உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications