6க்கும் பாதுகாப்பில்லை.. 80க்கும் பாதுகாப்பில்லை! மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்! விளாசிய எடப்பாடி!
சென்னை: கடலூரில் 80 வயது மூதாட்டியை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்துப் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்நிலையில், திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சவுக்கு தோப்பிற்கு மூதாட்டியை இழுத்துச்சென்றுள்ளனர்.
அங்கு மூதாட்டியின் வாயில் மண்ணை கொட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் முதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் அவரது காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்து சென்று தப்பியோடினர்.

இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்களிடம் ரத்த காயங்களுடன் கூட்டு பாலியல் கொடூரத்தில் இருந்து மீண்ட மூதாட்டி தனக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வர வைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூதாட்டியை கூட்டு பாலியல் செய்து நகைகளை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரே விசாரணையில் இறங்கினார். இந்த நிலையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுந்தரவேல் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர் அப்போது சுந்தரவேல் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படும் நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் முக ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications