கடலூர் பாமக வேட்பாளராக போட்டியிட மாட்டேன் என்கிறாரா தங்கர் பச்சான்? அவரே அளித்த விளக்கம்!
சென்னை: கடலூர் லோக்சபா தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) வேட்பாளராக போட்டியிட தாம் மறுப்பதாக பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. பாமகவுக்கு பாஜக மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. இந்த 10 தொகுதிகளில் 9 இடங்களுக்கான வேட்பாளர்களை பாமக இன்று அறிவித்தது.

கடலூர் லோக்சபா தொகுதியில் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான தங்கர் பச்சான் போட்டியிடுவார் என அறிவித்திருந்தது பாமக. இயக்குநர் தங்கர் பச்சான் திடீரென பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் படைப்பிலக்கியம், திரைப்படைப்புகள் பொதுவாக தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு ஆகியவற்றை மையமாக கொண்டதாக இருக்கும். வட தமிழ்நாடு பகுதிகளை மையப்படுத்தியோ வட தமிழ்நாட்டின் வாழ்வியலை வெளிப்படுத்தியோ படைப்புகள், சினிமாக்கள் வெளி வருவது அதிகம் இல்லைதான். ஆனால் இயக்குநர் தங்கர்பச்சான் தமது இலக்கிய படைப்புகள், சினிமா படைப்புகள் அனைத்தையும் வட தமிழ்நாட்டை மையப்படுத்தியதாகவே உருவாக்கி இருப்பார். தங்கர் பச்சானின் அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட சினிமாக்கள் இத்தகைய தளத்தை அடிப்படையாகவே கொண்டவை.

இத்தகைய படைப்பாளியான தங்கர் பச்சான் முதல் முறையாக அரசியல் களம் காண்பது திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கடலூர் லோக்சபா தொகுதியில் 7 முறை காங்கிரஸ், 5 முறை திமுக வென்றுள்ளது; அண்ணா திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரமேஷ் 5,22,160 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் கோவிந்தசாமி 3,78,177 வாக்குகள் பெற்றிருந்தார். பொதுவாக பாமகவின் வாக்கு வங்கி கணிசமாக உள்ள தொகுதி கடலூர். இதனாலேயே இம்முறை கடலூரில் இயக்குநர் தங்கர்பச்சான் பாமகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இயக்குர் தங்கர் பச்சான் தமது சமூக வலைதளங்களில் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என எச்சரித்துள்ளார் கடலூர் பாமக வேட்பாளரான இயக்குநர் தங்கர் பச்சான்.












Click it and Unblock the Notifications