"என் பிள்ளைகள் தலையில் அடித்து சொல்கிறேன்".. எடப்பாடிக்கு சி.வி சண்முகம் பகிரங்க சவால்
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் திரண்டுள்ளனர். திமுகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக எடப்பாடி முயற்சி செய்ததாக சி.வி. சண்முகம் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுத்தில் வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி அணி எதிராகவும் வாக்களித்துள்ளனர். வேலுமணி, சி.வி. சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை வைத்தார். திமுகவுடன் பேசவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கு சி.வி. சண்முகம் உணர்ச்சிவசப்பட்டு ஆக்ரோஷமாக பதில் அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதவி ஆசைக்காக, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யாருக்கு பதவி ஆசை என்பதை அவர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும். அவருக்கும் பிள்ளை இருக்கிறது. எனக்கும் பிள்ளை இருக்கிறான். முன்னாள் முதலமைச்சர் அவர்களே உங்களுக்கு ஒரே மகன். எனக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
தலையில் அடித்து சத்தியம் செய்வாரா
என் பிள்ளைகளை நான் அழைத்து வருகிறேன். உங்கள் பிள்ளைகளை நீங்கள் அழைத்து வாருங்கள். என் பிள்ளைகள் தலையின் சத்தியம் செய்து சொல்கிறேன். மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்று சான்றிதழ் வாங்கினேன். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு சென்னை கிளம்பிவிட்டேன். 7.30 மணிக்கு செங்கல்பட்டு தாண்டுவதற்குள் திமுகவில் இருந்து 2 முன்னாள் அமைச்சர்கள் எனக்கு அழைத்தனர். யார் என்று கேட்காதீர்கள். சொல்ல மாட்டேன்.
நம்பர் தெரியாமல் எடுத்துவிட்டேன். இவர்கள் எதற்கு எனக்கு அழைத்தனர் என்று யோசித்தேன். ஒரு முன்னாள் அமைச்சர் பார்த்து நல்ல பதவியாக வாங்கிட்டு வாங்க என்றார். இன்னொரு முன்னாள் அமைச்சர் அழைத்தபோது, என்ன 5 வருடங்களாக கூப்பிடாமல் இப்போது அழைத்துள்ளீர்கள் என கேட்டேன். எல்லாம் நல்ல படியாக செல்கிறது என்று சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நாங்களே தேர்தல் தோல்வி வருத்தத்தில் இருந்ததால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று சென்னை வந்துவிட்டோம்.
மனசாட்சி வேண்டாமா
அடுத்தநாள் காலை பொதுச்செயலாளர் எல்லோரையும் அழைத்தார். நாம் ஆட்சியமைக்கிறோம். திமுக நமக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறது. டெல்லியில் பேசிவிட்டோம். திமுக ஆட்சியில் பங்கெடுக்கவில்லை. கூட்டணியில் உள்ளவர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுக்க சொல்லியிருக்கிறார்கள். நமக்கும் ஒரு 25 அமைச்சர் பதவி கிடைக்கும். இந்த இயக்கம் ஆரம்பித்ததே திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுகவை அழிப்பதற்காக உருவான கட்சி.
இந்த இயக்கத்தில் எம்பி எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர், பொதுச்செயலாளர் பதவி அனுபவித்துள்ளார். கட்சியில் உள்ள எல்லோருமே 2 தலைமுறையாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்கிறோம். அப்படியிருக்கும்போது திமுகவை எதிர்ப்பது எப்படி நியாயம் என கேட்டேன். மனசாட்சி வேண்டாமா. மக்களும், தொண்டர்களும் எப்படி ஏற்பார்கள். மனைவியே விஷம் வைத்துவிடுவார். பிள்ளைகள் காரி துப்புவார்கள் என்று சொல்லி மறுத்துவிட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications