இது எங்க கட்சிடா.. நான் எங்க போகப் போறேன்! மேடையில் பொங்கிய சிவி சண்முகம்! கைதட்டி ரசித்த எடப்பாடி!
சென்னை: அதிமுக பொதுக்குழு செயற்குழு சென்னை வானகாரத்தில் நடைபெற்று வரும் நிலையில் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம். எடப்பாடிக்கு எதிராக அவர் பேசுவார் என செய்திகள் வெளியான நிலையில், "இது எங்க கட்சிடா.. நான் எங்கடா போவேன்" என ஆவேசமாக பேச, கைதட்டி ரசித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தின் மீதுதான் உள்ளது. இன்று சென்னை மாநகரத்தில் பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக ஏதேனும் சர்ச்சைகள் எழலாம் என அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டது.
காரணம் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர் அந்த நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புறக்கணித்து இருந்தார்.

அதிமுக பொதுக்குழு
மேலும் தங்கமணியும் அங்கு செல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தி விட்டு சென்ற பிறகு சிவி சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியே சென்று அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி பழனிச்சாமி உடன் சிவி சண்முகத்துக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அதன் காரணமாகத்தான் சி.வி சண்முகம் தனியாகச் சென்று மரியாதை செலுத்தினார் எனச் சொன்னார்கள்.
அதிமுக அரசியல்
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என சொன்ன செங்கோட்டையன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அதே கருத்தை கூறிவந்த சிவி சண்முகம் மீதும் எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே சிவி சண்முகம் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததாக சொல்லப்பட்டது. அது மட்டும் அல்லாமல் முன்னாள் அமைச்சர் தங்கமணி எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதால் தான் தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதாக கொங்கு மண்டலத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
சி.வி. சண்முகம் பேச்சு
எனவே இன்று நடைபெறும் பொது குழுவில் ஏதேனும் அதிரடி சம்பவங்கள் அரங்கேறலாம் என சொல்லி வந்தனர் அதிமுகவினர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக எடப்பாடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் சிவி சண்முகம். வழக்கம்போல பொதுக்குழுவில் மிக ஆவேசமாக பேசிய அவர்," கட்சிக்கு வெளியே எதிரிகளும் துரோகிகளும் இருக்கிறார்கள். ஆனால் நம் கூடவே பழகிவிட்டு கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டிய நேரம்.
எடப்பாடி கைதட்டி உற்சாகம்
இது கடந்த சில நாட்களாக நான் தங்கமணி உள்ளிட்டோர் கட்சியை விட்டு வெளியே செல்ல போகிறோம், பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பிரச்சனை ஏற்படுத்துவோம் என்றெல்லாம் பேசினார்கள். இப்போது என்ன நடந்தது? பொதுக்குழுவுக்கு முதல் ஆளாக வந்தது நானும் தங்கமணியும் தான். இது என் கட்சிடா நான் எங்கேயும் போக மாட்டேன்" என ஆவேசமாக பேசினார். இதனால் உற்சாகமடைந்த எடப்பாடி பழனிச்சாமி சிவி சண்முகத்தின் பேச்சை கைதட்டி ரசித்தார். அதிமுகவில் சண்முகத்தால் பிரச்சனை வரும் என பேசிய விவகாரங்களுக்கு அவரது பேச்சு மூலமே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் நிம்மதியை அளித்துள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
