சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி"
சென்னை: எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 21 பேர் மற்றும் அமைச்சர்கள் அல்லாத மா.செ. -2 பேர் 23 வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவித்திருக்கிறது அதிமுக. இதில், மாஜி அமைச்சரும் எம்.பி.யுமான சி.வி.சண்முகம், மைலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்கண்டனர் கீழ்காணும் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி
வேப்பனஹள்ளி - கேபி முனுசாமி
திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன்
நத்தம் - நத்தம் விசுவநாதன்
தொண்டாமுத்தூர் - எஸ்பி வேலுமணி
குமாரபாளையம் - தங்கமணி
ராயபுரம் - டி ஜெயக்குமார்
மைலம் - சிவி சண்முகம்
மதுரை மேற்கு - செல்லூர் ராஜு
பாலக்கோடு - கேபி அன்பழகன்
நன்னிலம் - ஆர். காமராஜ்
வேதாரண்யம் - ஓஎஸ் மணியன்
விராலிமலை - டாக்டர் சி விஜயபாஸ்கர்
கோவில்பட்டி - கடம்பூர் சி ராஜு
திருமங்கலம் - ஆர்பி உதயக்குமார்
சிவகாசி - ராஜேந்திர பாலாஜி
மதுரவாயல் - பெஞ்சமின்
கலசபாக்கம் - அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம் - ராஜன் செல்லப்பா
பவானி - கேசி கருப்பணன்
ஜோலார்பேட்டை - கேசி வீரணி
கரூர் - எம்ஆர் விஜயபாஸ்கர்
அரியலூர் - தாமரை எஸ் ராஜேந்திரன் என மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதிமுக உறுப்பினர்
இந்த நிலையில், அதிமுகவின் நீண்ட கால உறுப்பினரும் விழுப்புரம் நகர செயலாளருமான பசுபதி, அதிமுகவிலிருந்து விலகியிருக்கிறார். தனது பொறுப்புகளையும் ராஜினாமா செய்திருக்கிறார் பசுபதி. இந்த சம்பவம் அதிமுகவின் மேலிடத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தனது ராஜினாமாவிற்கு காரணமாக சி.வி.சண்முகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறாராம் பசுபதி. அடிமட்டக் கட்சித் தொண்டர்களும் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் சிவிசண்முகத்தால் ஓரங்கட்டப்படுவதாகவும்; 'பினாமிகளுக்கும்' அவரது சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் மட்டுமே சி.வி.சண்முகத்தால் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் பசுபதி குற்றம் சாட்டுகிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சண்முகம், திமுக வேட்பாளர் ஆர். லட்சுமணனிடம் தோல்வியடைந்தார். அந்தத் தோல்விக்குப் பிறகு, தனது தேர்தல் வாய்ப்புகளை அவர் மறுமதிப்பீடு செய்ததோடு, தற்போது விழுப்புரம் தொகுதிக்குப் பதிலாக மைலம் தொகுதியில் போட்டியிட காய்களை நகர்த்தினார். அதன்படி அவருக்கு மைலம் தொகுதி தரப்பட்டுள்ளது.
எம்.பி.யாக இருப்பவருக்கு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஏன் வாய்ப்புத்தர வேண்டும் ? அவர் தான் எம்.பி.யாக இருக்கிறார் அல்லவா... அப்படியிருக்கையில் கட்சிக்காரர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை ஏன் அவர் தட்டிப்பறிக்க வேண்டும் ? என்கிற குற்றச்சாட்டும் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் தகிக்கிறது.
இந்த நிலையில், விழுப்புரம் தொகுதிக்கு ஒரு பெண் வழக்கறிஞரை சண்முகம் பரிந்துரைத்திருக்கிறார். அவரின் இந்த பரிந்துரை, விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் இருக்கும் குறிப்பிட்ட சில பிரிவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியும் வருகிறது.
ராஜினாமா செய்துள்ள பசுபதி, சண்முகத்தின் ஆதிக்கத்தால் அதிருப்திகள் அதிகரித்துள்ள சூழலில், கட்சியின் மாவட்ட அமைப்பைப் பிரித்து, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் கட்சியின் மாவட்டக் கட்டமைப்பை மறு சீரமைப்பது அவசியம் என்கிறார். இதனை ஏற்கனவே எடப்பாடியிடம் வலியுறுத்தியும், அவர் இதனை செய்ய தயாராக இல்லை என்கிற அதிருப்தியும் வெளிப்படுகிறது.
நகர செயலாளர் பசுபதியின் விலகல், சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் பெரும் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. இந்த விவாதங்களும் அதிருப்திகளும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிற கருத்தும் எடப்பாடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சண்முகத்திற்கு எதிராக ஏதேனும் ஆக்சனை எடுக்க எடப்பாடியால் முடியுமா? என்கிற கேள்வியும் தேர்தல் களத்தில் எதிரொலிக்கத் தவறவில்லை.












Click it and Unblock the Notifications