வங்ககடலில் உருவான அக்வான் புயல்.. சென்னை டூ விசாகப்பட்டினம்.. மக்கள் அறிய வேண்டிய உண்மைகள்
சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'அக்வான்' புயலாக மாறும் நிலையில், இது தொடர்பாக பரவும் பல்வேறு வகையான வதந்திகளை ஒரு போதும் நம்பாதீர்கள். புயல் காலத்தில் சில இணையதளங்களும், யூடியூப் சேனல்களும் பரபரப்புக்காவும், வியூஸ்க்காவும், மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க விரும்புகின்றன. இதை சமூக வலைதளங்களில் பார்க்கும் மக்கள் பயந்து போகிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு.
ஒரு புயல் உருவாகிறது என்றால், அதன் தாக்கமாக மழை அதிகமாக பெய்யும், அந்த புயல் எந்த பகுதியில் கரையை கடக்கிறதோ அந்த பகுதியிலும், அந்த புயல் எந்த பகுதி வழியாக செல்கிறதோ அந்த பகுதிகளில் மழை பெய்யும். இது இயற்கை தான். இதில் மக்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கிறது.

புயல் கரையை கடக்கும் நாளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் மற்ற நாட்களில் இருக்காது என்று நினைக்காதீர்கள். புயல்கரையை கடக்கும் முன்பு எந்த ஊர் பகுதி வழியாக செல்கிறதோ, அங்கு கனமழை பெய்யும். அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, மிக மெதுவாக சென்னைக்கு பக்கத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக புயல் மெதுவாக சென்றது. இதனால் தான் 36 மணி நேரம் வரை இடைவிடாது சென்னையில் மழை பெய்தது.
அப்படியான பாதிப்பு வருவது என்பது அபூர்வமானது. அந்த புயல் மழைக்கு முன்பே சென்னையில் பலமுறை மழை பெய்து ஏரிகள் நிரம்பி இருந்தது. அந்த சூழலில் 36மணி நேரம் மழை பெய்ததே 2023 வெள்ளத்திற்கு காரணம். 2015 வெள்ளத்திற்கும் இதேபோன்ற மழை தான் காரணம். ஏரி,குளங்கள் நிரம்பிஇருந்த போது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் ஏற்கனவே சென்னையில் பெய்து வந்த மழையால் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால், அடையாறு ஆற்றில் 30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் பாய்ந்தது என்ற பதிவுகள் உள்ளனது. அந்த நேரத்தில் கடல் தண்ணீரை உள்வாங்க மறுத்ததும் பெரிய பாதிப்புக்கு காரணமாக அமைந்தது.
அப்படியான சூழலில் எல்லா வருடமும் ஏற்படும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் நடக்கவே நடக்காது என்று கூறவும் முடியாது. எனினும் முன்பு போல பாதிக்காத அளவிற்கே அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உதாரணத்திற்கு 2015 வெள்ளத்திற்கு பின் ஆறு, குளங்களை காக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆக்கிரமிப்புகளும் கணிசமாக அகற்றப்பட்டன. அதேபோல் 2023 வெள்ளத்திற்கு பிறகு, பள்ளிக்கரணை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் கணிசமாக எடுக்கப்பட்டுள்ளன.
20 செமீ வரை மழை பெய்தால் தாங்கும் அளவுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளன. எனவே சராசரி மழைக்கு பெரிய பாதிப்பு நிச்சயம் வராது. ஆனால் 2023, 2015 பாணியில் பெய்தால் தான் சிக்கல். அப்படி மழை பெய்தால், சென்னை மட்டுமல்ல உலகின் எந்த நகரமும் தாங்காது என்பதே எதார்த்தமான உண்மை. இப்போது விஷயத்திற்கு வருவோம். பலர் வதந்திகளை பரப்புவார்கள். அந்த வதந்திகளை நம்பாமல் நம்பகமான ஊடகங்கள் மற்றும வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புங்கள்..
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, இது 11.0° வடக்கு அட்சரேகை, 86.5° கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டுள்ளது.
இது அமைந்துள்ள இடத்திலிருந்து:
- திரிகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே 630 கி.மீ.
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்துக்கு மேற்கே 680 கி.மீ.
- சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 720 கி.மீ.
- விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 820 கி.மீ.
- ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 940 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
வரும் நாட்களில் என்ன நடக்கும்
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி:
- நவம்பர் 16 மாலை: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு.
- நவம்பர் 17 மாலை: புயல் தீவிரப் புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெற வாய்ப்பு.
- நவம்பர் 19 இரவு: மேலும் வலுப்பெற்று மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) மாறி, ஆந்திரப் பிராந்திய கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர வாய்ப்புள்ளது.
ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை
ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையுடன் கூடிய புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி ஆந்திரக் கடற்கரை அருகே புயல் வரக்கூடும் என்று மட்டுமே இந்த அறிவிப்பு கூறுகிறது. புயல் கரையைக் கடக்கும் இடம், நேரம் மற்றும் அதன் இறுதிப் பாதை ஆகியவை இன்னும் உறுதியாகவில்லை.. சென்னையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது புயல் கரையை நெருங்கும் 36 மணி நேரத்திற்குள் தான் தெரியவரும். அதாவது நாளை முதல் தெரிய தொடங்கும். புயல் சென்னைக்கு வரலாம். வராமல் ஆந்திரா வழியாக போகலாம் அல்லது சென்னையை நெருங்கி ஆந்திராவிற்கு போகலாம்.. எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். எனினும் தவறான வதந்திகளை நம்பி பீதிகளை கிளப்ப வேண்டாம்.




Click it and Unblock the Notifications
