சிங்கார சென்னை.. இப்போ எப்படியிருக்கு? சீர்கெட்ட சென்னையால்ல இருக்கு.. டி ஜெயக்குமார் ஆவேசம்
சென்னை: சிங்கார சென்னை இப்போது சீர்கெட்ட சென்னையாகிவிட்டது. இதுதான் திமுக செய்த சாதனை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பாக்கியா செல்லையா பள்ளியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 4 நாட்களுக்கு மேலாகச் சென்னை மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில், நேரடியாக மக்கள் பாதித்த இடங்களை எல்லாம் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை நீங்கள் பார்த்திருக்க முடியும். எனவே ஆட்சி செய்த தவறியதை, ஆளும் கட்சி செய்யத் தவறியதை, கழகம் என்றும் மக்கள் பணியில் என்கின்ற வகையில் இன்றைக்கு தங்களுடைய கடமையை செய்து வருகிறது.

தமிழகம்
மழை விட்டுக்கூட இந்த விடியாத அரசின் அவலமாக தான் இதனை நிச்சயமாகப் பார்க்க முடியும். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி அதுபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் ஏறக்குறைய 1800 கோடியில் திட்டங்களைக் கொண்டு வந்தது அதன் அடிப்படையிலே மழைநீர் செல்லக் கூடிய வகையில் எல்லா வழிகளையும் நாங்கள் ஏற்படுத்தினோம். உதாரணத்திற்கு ராயபுரம் தொகுதியை எடுத்துக் கொண்டால் அன்றைக்கு அதிமுக அரசில் பணிகளை எல்லாம் முழுமையாக மேற்கொண்டதன் காரணமாகதான் 20 செ,மீட்டர் மழை சென்னைக்கு வந்தும்கூட தண்ணீர் வடிந்துவிட்டது. அதற்கு முன்னதாக நாங்கள் மேற்கொண்ட பணிகளை இவர்கள் செய்யவில்லை. இவர்கள் அதனைத் தூர்வாரவில்லை. 2015 ஆம் ஆண்டு 3500 க்கு மேற்பட்ட மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்தோம். அதன் அடிப்படையில் நாங்கள் இந்த எண்ணிக்கையை 68 இடமாகக் குறைத்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ஒழுங்காக பராமரிப்பு பணியைச் செய்திருந்தால், அந்த பழைய நிலைமைக்கு போயிருக்க வாய்ப்பில்லை.

நிர்வாகத் திறமை
திமுக அரசின் நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தினால் சென்னை மக்களும், புறநகர் மக்களும் அவதிபடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மழைக்கு முன்பு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் தூர்வாருதல், முகத்தூரவத்தை சுத்தம் செய்து போன்ற பணிகளைச் செய்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. மழைக்கு பின்பு சென்னை மெட்ரோ தண்ணீர் ஆங்காங்கே கொப்பளித்து வந்துவிட்டது. வட சென்னை, தென் சென்னை போன்ற பல இடங்களில் சேறுகள் ஏற்பட்டு சாலைகள் முழுவதும் கருப்பாக மாறிவிட்டது.

மழைக்கு பிறகு
இது மிகவும் அபாயகரமானது. மழைக்குப் பின்பு சேறுகளை அகற்றிவிட்டு,அந்த பகுதியில் பிளிசிங் பவுடர் போட்டு, அங்கு ஒரு மருத்துவ முகாம்களை நடத்தினால் டெங்கு, மலேரியா, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா இவை அனைத்தும் வராது. சென்னையில் குடிநீரும், கழிவுநீரும் ஒன்றாகக் கலந்துவிட்டது. சிங்கார சென்னை என்று சொல்லி, சீர்கெட்ட சென்னையாகதான் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார்களே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் மாஸ்டர் திட்டம் போட்ட காரணத்தினால்தான் மழை பெய்தாலும் தண்ணீர் வற்றியது. திருப்புகழ் தலைமையில் கமிட்டிபோட்டு இனிமேல்தான் ஆராய்ச்சி செய்யபோகிராராம். இதனை 4 மாதத்திற்கு முன்னே செய்திருக்க வேண்டுமா? இல்லையா. எங்கள் மீது உங்களுக்குக் குறை சொல்வதை வாடிக்கையாகிவிட்டது. இதே குழுவை முன்கூட்டியே போட்டு அதன் அறிக்கையை 1 மாதத்திற்குள் வாங்கி அசுர வேகத்தில் நீங்கள் பணி செய்திருந்தால் இப்போது ஒரு குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கமாட்டீர்களே என்றார்.

மழை வெள்ளம்
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி: மழை வெள்ளம் தொடர்பான பணிகளில் முதலமைச்சர் கடந்த ஆட்சி குறித்து விமர்சனம் செய்துள்ளாரே?
பதில்: முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு தவறான தகவலை அளிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். அப்படி என்றால் எந்த அதிகாரியும் கள நிலவரத்தை சொல்லவில்லையா. அடுத்தவர்களின் மனநிலையில் இருந்து சிந்திப்பவன்தான் தலைவன். அப்படிப்பட்ட தலைவர்கள் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும். அதனால் எங்களுக்கு களநிலவரம் தெரிந்தது. முதல்வரின் தொகுதியே சேறும் சகதியுமாக உள்ளது என்றால் மற்ற தொகுதிகள் மட்டும் எப்படி நன்றாக இருக்கும்?
கேள்வி: மழையில் மக்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் என்கிறார் முதலமைச்சர் .ஆனால் கட்டிக் கொள்ளத் துணி இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து தங்களுடைய கருத்து?
பதில்: விடியல் அரசு என்று சொல்லி, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, மக்களைத் திசை திருப்பும் பணியில் இருக்கிறார்கள். விளம்பரத்தின் மூலம் எதுவும் செய்துவிடலாம் என்று இருக்கிறார்கள். இது நடக்காத காரியம். இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு ஆட்சி அதிருப்தி சம்பாதித்த வரலாறு கிடையவே கிடையாது. 7 மாதத்தில் மக்களுடைய வெறுப்பைச் சம்பாதித்துள்ள ஆட்சி என்றால் அது திமுக ஆட்சிதான். ஆங்காங்கே மறியல். கட்டிக் கொள்வதற்குத் துணி இல்லை. அவர்களைச் சமுதாயக் கூடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யவில்லை. சாப்பாடு போடவில்லை. இவை அனைத்தும் செய்யவேண்டியதுதான் அரசின் கடமை என்றார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications