ரூ.1 கோடி கேட்டாரா மாவட்ட செயலாளர்? பெண் சேர்மன் ராஜினாமாவின் பரபர பின்னணி!
தென்காசியில் தலித் பெண் சேர்மன் ராஜினாமா செய்ய என்ன காரணம்
சென்னை: தலித் பெண் சேர்மன் செல்லம்மாள் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது தென்காசி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு பின்னணி காரணம் என்ன? யார் இந்த செல்லம்மாள்? என்ன தான் நடந்தது?
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 வார்டுகள் இருக்கின்றன.. இதில் திமுக 11 வார்டுகளில், அதிமுக 5 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
இதில் 13வது வார்டில் வெற்றி பெற்றவர் ஜெயக்குமார்.. 10வது வார்டில் வெற்றி பெற்றவர் செல்லம்மாள்.. இருவருமே திமுகவை சேர்ந்தவர்கள்.. இருவருமே ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

மறைமுக தேர்தல்
நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக ஆதரவுடன் செல்லம்மாள் 13 ஓட்டுகள் பெற்றார்.. ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதாவது யூனியன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயக்குமார் வெறும் 4 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார்.. ஆனால், மாவட்ட திமுக தலைமையோ, ஜெயக்குமாரை ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

செல்லம்மாள்
காரணம், கடையம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் என்பவர், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி செல்லம்மாளை வெற்றிபெற செய்வதாக ஒரு தகவல் கசிந்தது.. இதன் காரணமாக குமாரை ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து திமுக தலைமை அதிரடியாக நீக்கியது... பிறகு, ஊராட்சி குழு தலைவர் பதவியில் அமர்ந்த செல்லம்மாளிடம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது,.

உட்கட்சி பூசல்
இந்த மிரட்டலுக்கு பயந்துதான் செல்லம்மாள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.. தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹெலனிடம், தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார்.. இது குறித்து செய்தியாளர்கள் செல்லம்மாளிடம் கருத்து கேட்டனர்.. அதற்கு அவர், "திமுகவில் நடக்கும் நடக்கும் உள்கட்சி பூசல் காரணமாக நான் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று மட்டும் சொன்னார். எனினும் வார்டு உறுப்பினராக அவர் இப்போது நீடிக்கிறார்.

வீடியோ
இதனிடையே செல்லம்மாளிடம் ஒருவர் நேரில் பேசும் வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது... அதில் செல்லம்மாள் ஒருவரிடம் பேசுகிறார், "என்கிட்ட ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் தந்துடுங்கன்னு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கேட்கிறார்... என்கிட்ட அவ்வளவு பணம் எங்கே இருக்கு? அதனால் தான் ராஜினாமா செய்தேன்" என்பது பதிவாகி உள்ளது.

அதிர்ச்சி
இதுதான் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கூட்டி வருகிறது.. கடையம் ஊராட்சி ஒன்றியம், இந்த முறை தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.. அதனால்தான், அதே சமூகத்தை சேர்ந்த செல்லம்மாள் சேர்மன் ஆக தேர்வு செய்யப்பட்டார்... செல்லம்மாளை பொறுத்தவரை வேறு எந்த பின்புலமும் இல்லாதவர் என்கிறார்கள்.. பணபலமும் இல்லையாம்.. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சேர்மனிடம் திமுக மாவட்ட செயலாளர் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதனால் செல்லம்மாள் ராஜினாமா செய்ததாக கூறப்படும் சம்பவமும் மிகுந்த அதிர்வலையை அரசியல் களத்தில் உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications