நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன்.. வெளியிட்ட ஒற்றை பதிவு.. அந்த 'கேப்சன்' தான் ஹைலைட்
சென்னை: நாங்க எப்படி போனமோ அப்படியே திரும்ப வந்துட்டோம்னு சொல்லு என்று ரஜினி நடித்த கபாலி படத்தில் ஒரு பஞ்ச் வசனம் இருக்கும்.. அந்த கேப்சனுடன் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் போட்ட குரூப் போட்டோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. இதேபோல் பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. ஆனால் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வென்றுள்ளது..

விருதுநகர், நாமக்கல், தர்மபுரி ஆகிய தொகுதிகளில் மட்டும் கடும் போட்டிக்கு பிறகு திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தமிழநாட்டில் வெற்றி பெற்ற திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி என வரிசையாக எல்லா கட்சி எம்பிக்களும் இன்று நாடாளுமன்றத்தில் முறைப்படி எம்பிக்களாக பதவியேற்றனர்.
முதலில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்ற சசிகாந்த் செந்தில், வாழிய வையகம்! வாழ்க தமிழ்! என்று முழக்கமிட்டார். தலித்- ஆதிவாசிகள்- சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.
'சத்தம் பத்தல'.. தயாநிதி மாறன் சொன்னதுதான் மாயம்.. நாடாளுமன்றத்தை அதிர வைத்த திமுக எம்பிக்கள்
அடுத்தாக பதவியேற்ற வட சென்னை தொகுதி திமுக எம்பி கலாநிதி வீராசாமி, தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன், பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார். அதன்பின்னர் பதவியேற்ற தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க தமிழ்நாடு என்று குரல் எழுப்பினார்.
அதன்பின்னர் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன், பதவியேற்ற சென்றார். அப்போது திமுக எம்பிக்கள் கை தட்ட தொடங்கினார்கள். அப்போது தயாநிதி மாறன் சத்தம் பத்தல என்று கூறினார். உடனே திமுக காங்கிரஸ் எம்பிக்கள், நாடாளுமன்றமே அதிரும் வகையில் கைதட்டினார்கள்.
அப்படியே உற்சாகத்துடன் பதவியேற்ற தயாநிதி மாறன் எம்பி, வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார் . இதேபோல் பல்வேறு எம்பிக்களும் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என்று கூறி பதவியேற்றனர். கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில எம்பிக்கள் எவ வேலு வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

தொடர்ந்து புதுச்சேரி உள்பட 40 தொகுதி எம்பிக்களும் பதவியேற்றனர். திமுகவில் ஏற்கனவே எம்பிக்களாக இருந்து போட்டியிட்ட, தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி, டிஆர் பாலு, கதிர் ஆனந்த், ஆ ராசா, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட அனைவருமே எம்பிக்களாகி உள்ளனர். இந்நிலையில் இன்று பதவியேற்ற திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் குரூப் புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன், "நாங்க வந்துட்டோம்னு சொல்லு!
திரும்பி வந்துட்டோம்னு சொல்லு! " என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications