துரை தயாநிதிக்கு இமெயிலில் வந்த கொலை மிரட்டல்.. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் முதல்வர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார். துரை தயாநிதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் துரை தயாநிதி வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி துரை தயாநிதி அழகிரி திடீரென வீட்டில் மயங்கி சரிந்து விழுந்தார். இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பொது வார்டுக்கு மாற்றினார்கள். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சென்று இருமுறை முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து விட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தார். வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் தற்போது துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் தளம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்தான், சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு மெயிலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு இமெயில் மூலமாக புகார் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பிய நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி ஏ-பிளாக்கில் கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications