இன்று இயங்காத பத்திரப்பதிவு அலுவலகங்கள்.. தமிழக அரசின் அறிவிப்புக்கு பணியாளர்கள் எதிர்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்களின் நலன் கருதி பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. விடுமுறை நாளான இன்று பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
தமிழ்நாட்டில் சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் மக்கள் தங்களின் வாங்க விரும்பும் சொத்துகளை பதிவு செய்வது வழக்கமான விஷயம் தான். இதனால் முகூர்த்த நாட்களில் வழக்கத்திற்கும் அதிகமான டோக்கன்கள் முன்கூட்டிய அளிக்கப்படும் நடைமுறையும் உள்ளது. அதற்கேற்ப பிப்.2ஆம் தேதியான இன்று முகூர்த்த நாளாக அமைந்துள்ளது.

முகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடக்கும் என்பதால், ஞாயிறுக் கிழமையான இன்றும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் தரப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238 கோடியே 15 லட்சம் வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 31ஆம் தேதி தேதி 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த நிதியாண்டில் 2வது முறையாக அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது. அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இதனால் பொதுமக்களின் நலன் கருதி பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். அதேபோல் விடுமுறை நாளான ஞாயிறுக் கிழமைகளில் பணி செய்யும் பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று நாட்களில் விடுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விடுமுறை நாளில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பத்திரப்பதிவு அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பதிவுத்துறை அலுவலர்கள் யாரும் வராததால், பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கவில்லை. இதனால் பத்திரப்பதிவு நடக்கும் என்று காலையிலேயே வந்த மக்கள் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications