சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்தை தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.. அறநிலையத்துறை
சென்னை: சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனத்தை தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஹைகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்ததை எதிர்த்த வழக்கில் அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஆடல்வல்லான் நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். நடராஜரின் பொற்சபையாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.
கொரோனா காலத்தில் தடை: கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி வழிபட தீட்சிதர்கள் தடை விதித்து இருந்தனர்.
தீட்சிதர்கள் தடை: நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்களால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர்.

ஹைகோர்ட்டில் வழக்கு: இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை பிறப்பித்தது.
தமிழக அரசு அரசாணை: தீட்சிதர்கள் விதித்த தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
பக்தர்கள் தரிசனம்: நடராஜர் கோயிலில் பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். ஏற்கெனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
மீண்டும் சர்ச்சை: இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி 4 நாட்கள் பக்தர்கள் கனகசபை ஏறுவதற்கு தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிவிப்பு பலகையை அகற்றி விட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைகோர்ட்டில் விசாரணை: கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளிடம் கோரிக்கை: இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, தீட்சதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் கனகசபையிலிருந்து தரிசிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
நீதிபதிகள் கேள்வி: கோவிலை நிர்வகிக்கவே உச்ச நீதிமன்றத்தால் தீட்சதர்கள் நியமிக்கப்பட்டனர், ஆனால் கனகசபையிலிருந்து பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். தீட்சதர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடாமல், அவர்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக மூன்றாவது நபரான மனுதாரர் தாக்கல் செய்த வழக்கை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை பதில்: இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் கனகசபை தரிசனத்தை மாற்றும் அதிகாரம் தீட்சிதர்களுக்கு இல்லை என அறநிலையத்துறை சார்பில் வாதிடப்பட்டது. கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்திற்கு எதிரானது என அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமல்ல என ஹைகோர்ட் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications