முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு: எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 19ம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா பங்கேற்றார்.

இந்த ஊர்வலத்தின் போது பேசிய எச்.ராஜா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். மேலும், அந்த ஊர்வலத்தில், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் எச்.ராஜா பேசியதாக புகார்கள் எழுந்தன.

எச்.ராஜாவின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் எச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியது என நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications