அந்த நாள்..இபிஎஸ் கோஷ்டிக்கு டெல்லியின் கெடு..அப்புறம் என்ன நடந்தாலும் கம்பெனி காரணமில்லையாம்!
சென்னை: அதிமுகவின் கோஷ்டிகளை ஒருங்கிணைக்க எம்ஜிஆர் பிறந்த நாளை டெல்லி பாஜக மேலிடம் இறுதி கெடு நாளாக விதித்துள்ளது என்கின்றன அரசியல் வட்டாரங்கள். அப்படியும் அதிமுக கோஷ்டிகள் இணையாமல் போனால் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல எனவும் எச்சரித்தும் இருக்கிறதாம் டெல்லி.
2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் பாஜக படுதீவிரமாக இருந்து வருகிறது. பாஜகவுக்கு பெரும் குடைச்சலாகவும் இடைஞ்சலாகவும் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமானது. தமிழகத்தில் பாஜகவால் தனித்து போட்டியிட்டு சாதிக்க முடியாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
பாஜகவுக்கு தமிழகத்தில் இருப்பது அதிமுக மீதான சவாரி மட்டும்தான். இந்த வாய்ப்பை இறுகப் பிடித்துக் கொண்டு எப்படியாவது சில இடங்களில் வெல்ல வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது பாஜக.

பாஜக நோஸ் கட்
ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் கோஷ்டிகள் தனியாக பாட்டுபாடுகின்றனர். இந்த இரைச்சலுக்கு நடுவே என்ன செய்வது என தெரியாமல் பல்வேறு நடவடிக்கைகளை பாஜகவும் மேற்கொண்டது. தற்போதைய நிலையில் பாஜகவின் அத்தனை முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது எடப்பாடி பழனிசாமிதான். அதனால்தான் டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிசாமிக்கு நோஸ் கட் கொடுத்தது பாஜக மேலிடம்.

இபிஎஸ் சீற்றம்
டெல்லியில் வாங்கிய நோஸ்கட்டை அவ்வளவு சீக்கிரமாக மறப்பவர் இல்லை எடப்பாடி பழனிசாமி. அதனால் பாஜகவை கழற்றிவிட்டு மெகா கூட்டணிக்கான முயற்சிகளில் இறங்கினார். பிரதமர் மோடி தமிழகம் வந்த போது வேண்டா வெறுப்பாக ஓபிஎஸ் உடன் நின்று வரவேற்றார். இப்படி எல்லாம் சந்திப்பதில், வரவேற்பதில் தமக்கு விருப்பம் கிடையாது என்பதைதான் அமித்ஷாவை ஏன் அவசியம் போய் சந்திக்கனுமா? என கேள்வி கேட்டு கொட்டித் தீர்த்தார் எடப்பாடி பழனிசாமி.

அடுத்த ஆக்ஷன் ரெடி?
என்னதான் அதிமுக கோஷ்டிகள் இப்படி சீண்டினாலும் அவமரியாதை செய்தாலும் பாஜகவோ, சாமீகளா! ஒன்னு சேர்ந்துடுங்க என்ற ரேஞ்சில் கெஞ்சாத குறையாகத்தான் போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது கெஞ்சிப் பயனில்லை.. இனி இறங்கித்தான் ஆக வேண்டும் என்ற முடிவோடு நிற்கிறதாம் டெல்லி. இதற்காக எடப்பாடி பழனிசாமி கோஷ்டி மீதான பிடியை இறுக்கத் தொடங்கி இருக்கிறதாம் டெல்லி பாஜக மேலிடம்.

எம்ஜிஆர் பிறந்த நாள்
எம்ஜிஆர் பிறந்த நாள் ஜனவரி 17-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்டமான மாநாடு நடத்த திட்டமிட்டு வருகிறார். இந்த மாநாடு நடக்கட்டும்.. ஆனால் அப்படி ஒரு மாநாடு நடந்தால் அதிமுகவின் கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து நடத்தும் மாநாடாகத்தான் இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறதாம். அப்படி தங்களது விருப்பப்படி எடப்பாடி கோஷ்டி நடந்து கொள்ளாவிட்டால் பின்விளைவுகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனவும் சொல்லிவிட்டதாம் டெல்லி.












Click it and Unblock the Notifications