எம்பிக்களின் எண்ணிக்கை 850ஆக அதிகரித்தால்.. இவ்வளவு பிரச்சனை இருக்கு! லிஸ்ட் போட்ட ரவிக்குமார் எம்பி
சென்னை: தொகுதி மறுவரையறை மூலம் தற்போது உள்ள எம்பிக்களின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அப்படி மட்டும் நடந்தால் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் விமர்சித்திருக்கிறார்.
இதை வெறும் எண்ணிக்கை உயர்வாக மட்டும் பாரக்க முடியாது. இதற்கு பின்னால் நாடாளுமன்றம் செயல்படும் முறை முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று ரவிக்குமார் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது

மக்களவை செயல்படும் நாட்கள் :
தற்போது மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில் நாடாளுமன்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கு 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. கடந்த 17 ஆவது நாடாளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 55 நாட்கள் மட்டும்தான் செயல்பட்டது. 850 உறுப்பினர்களாகும்போது ஒரு உறுப்பினர் இதே 3 நிமிடங்கள் பேசவேண்டுமெனில் நாடாளுமன்றம் செயல்படும் நாட்கள் 100 நாட்களைத்தாண்டி உயர்த்தப்பட வேண்டும். அதற்கு பாஜகவிடமிருந்து எந்த உத்தரவாதமும் இல்லை.
வினாக்கள் எழுப்புவதிலும் இதே சிக்கல்தான். இப்போதுள்ள லாட்டரி முறையில் ஒரு உறுப்பினருக்கு உடுக்குறியிட்ட வினா (starred question) கிடைப்பது அவரது அதிர்ஷ்டம் சார்ந்ததுதான். 850 உறுப்பினர்கள் என்னும்போது அது மேலும் அரிதாகிவிடும்.
அமைச்சர்களின் எண்ணிக்கை :
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என 2003 இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 72 ஆக இருக்கிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும்போது அதற்கேற்ப அமைச்சர்களின் எண்ணிக்கை 128 ஆக உயரும். அது வீண் செலவுக்கே வழிவகுக்கும்.
மாநிலங்களவை மக்களவை விகிதம்:
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படும்போது மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் மக்களவை உறுப்பினர்களுக்குமிடையே இருக்கும் விகிதம் மாறும்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலும் (standing committees) , கூட்டு நாடாளுமன்ற குழுக்களிலும் (JPC) இடம்பெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். அதனால் மாநிலங்களின் குரல் பலவீனமாகும்.
நாடாளுமன்றமானது ஜனநாயகத்தின் முதன்மையான கருவியாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டால் இந்த அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications