3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களா? உடனே வருது டிரான்ஸ்பர்.. பள்ளிக்கல்வி துறை அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 வருடத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கட்டாய இடமாறுதல் செய்வதற்காக கணக்கெடுப்பையும் பள்ளிக்கல்வித் துறை கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது... இந்நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வித்துறை: அந்தவகையில், நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகள் தொடர்பான தகவல்களை ஜூலை 5ம் தேதிக்குள் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
வழிகாட்டுதல்கள்: பள்ளிக்கல்வித் துறையில் அனைத்துவித இயக்குநரகங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகும். அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல் அவர்களை மாறுதல் செய்யவும்,விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி பள்ளிக்கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்குநரகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட பணியிடங்களில் வேலை செய்பவர்களின் பட்டியலை கணக்கெடுக்க வேண்டும்.
நாளை பட்டியல்: அந்த விவரங்களை பட்டியலாக தயாரித்து நாளை (ஜூலை 5) மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அறிக்கையை சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications