“நண்பர் விஜய்யின் முயற்சிக்கு வாழ்த்துகள்!” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் தொடங்கி, உதயநிதி ஸ்டாலின் வரை திரைத்துறையை சேர்ந்தவர்களை தமிழ்நாடு அரசியல் வரவேற்றிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த வரிசையில் புதியதாக நடிகர் விஜய் இணைந்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சி தொடங்கிய உடனே முதல் ஆளாய் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடக்கும் தவெக முதல் மாநில மாநாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 'உயிரினும் மேலான' என்கிற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு பெற்றவருக்கு ரூ.3 லட்சம், இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு ரூ.2 லட்சம், மூன்றாம் பரிசு வென்றவர்களுக்கு ரூ.1 லட்சம் என பரிசு வழங்கப்பட்டது. இதில் பரிசுகளை வழங்கி கவுரவித்த உதயநிதி ஸ்டாலின்,
"முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட இளைஞரணி வரலாற்றில் முக்கியமான, மறக்க முடியாத நாள். கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு நம் கழகத்தில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் முதல்வர் ஒவ்வொரு பணிகளை வழங்கி இருந்தார். இளைஞர் அணிக்கு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகங்கள் அமைக்க வேண்டும் என்றும், "உயிரினும் மேலான" என்ற பேச்சுப் போட்டியும் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் இதுவரை 75 தொகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் அனைத்து தொகுதிகளிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகங்களை திறந்து விடுவோம். இங்கே உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தலைசிறந்த பேச்சாளர்களாக இடி, மின்னல், மழையை போல் உருவாக வேண்டும்.
தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை பேச்சாளர்களை, தலைவரிடம் ஒப்படைப்பதில் இளைஞர் அணி மகிழ்ச்சி அடைகிறது. இனி எப்போதும் எங்களுடன்தான் இணைந்து பயணம் செய்ய போகிறீர்கள். உங்களுக்கு எப்போதும், எல்லா வகைகளிலும் இளைஞர் அணி துணையாக இருக்கும்" என பேசியிருந்தார்.
.












Click it and Unblock the Notifications