வாகன ஓட்டிகளே உஷார்.. நம்பர் பிளேட்டில் இனி இந்த டிசைன்கள் இருந்தால் அபராதம்.. போலீஸ் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் பைக் மற்றும் கார் ஓட்டுனர்கள் தங்கள் நம்பர் பிளேட்களில் டிசைன்களை பயன்படுத்த கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுக்க பலர் தங்கள் கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. எண்களை சாதாரணமாக எழுதாமல் விசித்திரமான முறையில் எழுதுவது, அடையாளம் காண முடியாத அளவிற்கு எண்களை எழுதுவது என்று பலர் நம்பர் பிளேட்களில் டிசைன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இன்னும் பலர் நம்பர் பிளேட்களை தங்கள் ஜாதி கொடி நிறத்தில் வடிவமைப்பது, 007 என்பதை துப்பாக்கி போல எழுதுவது, தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படத்தின் டைட்டில் ஸ்டைலில் எண்களை எழுதுவது என்று தங்கள் நம்பர் பிளேட்டில் கைவண்ணத்தை காட்டி வருகிறார்கள்..

மோசம்
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் பின் பக்கம் நம்பர் பிளேட் வைக்காமல் முன் பக்கம் மட்டும் நம்பர் பிளேட் வைப்பது. அதிலும் பல காதல் கவிதைகள், ஜோக்குகளை எழுதிக்கொள்வது. முடிந்த அளவு நம்பர் பிளேட்டை மறைக்கும் வகையில் டிசைன்களை வைத்து இருப்பது என வித விதமாக நம்பர் பிளேட்களை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் சாதாரண பொதுமக்களுக்கான பயன்பாட்டு வாகனங்கள் வெள்ளை போர்டில் கருப்பு நிறத்தில் எண்களை பொறிக்க வேண்டும்.

தவறு
வணிக ரீதியான வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் கருப்பு நிற போர்டில் எண்களை பெற்று இருக்க வேண்டும். இதன் அளவு 200 X 100 மி.மீ அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பேருந்துகள் 340 X 200 மி.மீ அளவில் இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளது. ஆனால் இதை எல்லாம் மீறி பலர் பல விதங்களில் தங்கள் வாகனங்களில் விருப்பத்தின் அடிப்படையில் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

கண்டிப்பு
இப்படி வாகனங்களின் நம்பர் பிளேட்களில் டிசைன்களை பயன்படுத்த கூடாது என்று தமிழ்நாடு போலீஸ் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில்தான் இனிமேல் நம்பர் பிளேட்களில் எந்த விதமான டிசைன்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து சட்டப்பிரிவு 177ன்கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அபராதம்
அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பில் மட்டுமே நம்பர் பிளேட்கள் இருக்க வேண்டும். அதை தவிர்த்து நம்பர் பிளேட்களில் வேறு டிசைன்கள், ஸ்டைல்கள் இருக்க கூடாது. இதையும் மீறி புதிய வகை நம்பர் பிளேட்கள் பயன்படுத்தப்பட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உங்கள் வாகனங்களில் இப்படி டிசைன் இருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள் மக்களே!












Click it and Unblock the Notifications