48 வருட அரசியல் வாழ்க்கை.. திருப்பூரில் மீண்டும் போட்டியிடும் சிபிஐ-யின் சுப்பராயன்.. யார் இவர்?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர் சுப்பராயன் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய செயலாளர் நாராயணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக கே.சுப்பராயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 1976ம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானர். திருப்பூரில் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிற இவர் பனியன் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்திலும் ஏஐடியூசி அமைப்பின் பல தொழிற்சங்கங்களுக்கும் பொறுப்பு வகித்தவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர், கோவை மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகக்குழு, செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும், மாநில துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் செயல்பட்டிருக்கிறார். அதே போல் ஏஐடியூசி தொழிற்சங்க அமைப்பில் தமிழ்நாடு மாநில தலைவர், தேசிய துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர்.
அதேபோல 1985ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும் ஒன்றுபட்டு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். கடந்த 2004 முதல் 2009 வரை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும், செயல்பட்டவர். தற்போது 2019 முதல் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications