தமிழக சட்டமன்றத்தில் நடந்த சிறப்புக்கூட்டங்களும்.. நிறைவேற்றப்பட்ட மசோதாக்களும்.. விவரம்!
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. தமிழகத்தில் இதற்கு முன்பு சில முக்கிய காரணங்களுக்காக பலமுறை சட்டமன்ற சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கிடப்பில் வைத்து இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அவை கூடியதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் வாசிக்கப்பட்டது. வேணு, வெங்கடசாமி, வேல்துரை உள்ளிட்ட மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். காரணம் சொல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது ஏற்புடையது அல்ல என சட்டமன்றம் கருதுவதாக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்கள் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சில முக்கிய காரணங்களுக்காக இதற்கு முன்பு பலமுறை தமிழகத்தில் சட்டமன்ற சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.
* கடந்த 2011 ஆம் அண்டு முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. அதாவது, முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய அரசு படைகளை அனுப்ப கோரியும், அப்போதைய மத்திய அரசின் மவுனத்தை கண்டித்தும் 2011-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியின் போது, இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று சட்ட சபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு, மாற்றாக சட்ட மன்றத்தில் ஜனவரி 23-ம் தேதி மாலை நேரத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல்வராக ஓ பன்னீர் செல்வம் பதவி வகித்தார்.
* கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளித்ததை எதிர்த்து 2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* அதன்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் தான், ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் சிறப்பு கூட்டம் கூடியது. 10 மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
