தீபாவளி! திரயோதசி திதியில் தங்கம் வாங்கினால் சுபிக்ஷம்! சென்னையில் இன்று எப்போது வாங்கலாம்?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது வழக்கம். இந்த நன்னாளுக்கு தன்தேரஸ் அல்லது தன த்ரயோதசி என பெயர்.
அது போல் தென் இந்தியாவில் தீபாவளிக்கு அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி நகைகளை வாங்குவர். அது போல் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி புது மாப்பிள்ளைக்கு மோதிரம் போடும் பழக்கம் உள்ளது.

ஒரு நல்ல நாட்களில் துணி உள்ளிட்டவைகளில் முதலீடு செய்வதை காட்டிலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளில் முதலீடு செய்யலாம் என பலர் கருதுகிறார்கள். அதிலும் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாள் தங்கம் வாங்கி அதை சுவாமி முன்பு வைத்து வழிபடும் பழக்கமும் இருக்கிறது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தந்தேரஸ் எனப்படும் முகூர்த்தமானது இன்றைய தினம் தொடங்கி நாளை முடிகிறது. அதாவது நாளை திரயோதசி திதி ஆகும். இந்த திதியைத்தான் தன திரயோதசி என்கிறார்கள்.
இந்த நாளில் தங்கம் வாங்கினால் சுபிக்ஷம் ஏற்படும் என்கிறார்கள். திரயோதசி திதியானது இன்று அதிகாலை 1 மணி முதல் நாளை காலை 3.45 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும் செல்வச் செழிப்பையும் ஏற்படுத்தும். குறிப்பாக சென்னையில் இருப்பவர்கள் இன்று 6.44 மணி முதல் 8.11 மணிக்குள்ளாக தங்கம், வெள்ளி நகைகளை வாங்கலாம்.
இந்த நேரமானது ஒவ்வொரு நகரத்திற்கும் மாறுபடும். அதாவது மும்பையில் இரவு 7.04 மணி முதல் 8.37 மணி வரையும் டெல்லியில் 6.31 மணி முதல் 8.13 மணி வரையும் பெங்களூரில் 6.55 மணி முதல் 8.22 மணி வரையும் தங்கம் வாங்க பொன்னான நேரமாகும்.
தங்கம், வெள்ளியை காட்டிலும் செம்பு, பித்தளை உள்ளிட்டவை வாங்கலாம். எவர் சில்வர் பாத்திரம் வாங்கி வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு அதில் தண்ணீர் அல்லது உணவை நிரப்பி கொண்டு வரலாம். சிலர் மின்னணு சாதனங்கள், வாகனங்களையும் வாங்குவர். மேலும் லட்சுமி அல்லது விநாயகரின் உலோகம் அல்லது களிமண் சிலையையும் வாங்கலாம்.
சென்னையில் அக்டோபர் 29 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 480 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ 7375 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications