வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்? தலைமைச் செயலகத்தில் நடந்த பரபர ஆலோசனை!
அயலகத் தமிழர் நல வாரியத்தின் முதல் கூட்டத்திலேயே பல முக்கிய பயனுள்ள முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை: வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் பரபரப்பான ஆலோசனை நடத்தினர்.
வெளிநாடுகளில் வேலைக்காக சென்று இறந்து போகும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி, பெண் குழந்தைகளுக்கு திருமண உதவி திட்டம், 24x7 மணிநேர தொலைபேசி உதவி மையம், உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான விவரம் வருமாறு;

அயலகத் தமிழர் நல வாரியம்
தமிழ்நாட்டிற்கு வெளியேயும், அயல் நாடுகளில் வேலை, கல்வி, வியாபாரம், வணிகம் நிமித்தமாக சென்று வசிக்கும் அயலகத் தமிழர்களின் நலன்கள் தொடர்பாக திட்டமிடவும், புதிய நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் அமைக்கப்பட்ட "அயலகத் தமிழர் நல வாரியத்தின்" முதற் கூட்டம் நேற்று வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது.

அனைத்து உறுப்பினர்கள்
இதில் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர், தமிழ் இணையக்கல்வி கழகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு) ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.வாரியத்தின் உறுப்பினர் செயலர் / அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் இத்துறையால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் இத்துறையால் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் தொடர்பாக அறிமுகம் செய்ததுடன், வாரியத்தின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் வாரியத்தால் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் தொடர்பாக கூட்டப்பொருளை சமர்ப்பித்தார்.

முக்கிய முடிவுகள்
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தவாறு அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், அவர்களுக்கு காப்பீட்டு திட்டம், தமிழகத்திற்கு வெளியே மற்றும் அயல்நாடுகளுக்கு வேலை நிமித்தம் சென்று அங்கு இறந்து போகும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி, பெண் குழந்தைகளுக்கு திருமண உதவி திட்டம், 24x7 மணிநேர தொலைபேசி உதவி மையம், தரவுத்தளம், மாவட்டங்களில் முன் பயண புத்தாக்க பயிற்சி மையம் அமைத்தல் ஆகிய நலத்திட்டங்களை வாரியம் மூலமாக செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

பல்வேறு நாடுகள்
மேலும் வாரியத்தின் நிர்வாக செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வத்ற்காக துபாயிலிருந்து எஸ்.எஸ்.மீரான், லண்டனில் இருந்து பைசல், அமெரிக்காவிலிருந்து கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன் என பல நாடுகளில் இருந்து புலம்பெயர் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் சென்னை வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications